திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ. 300 கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகளும், நவம்பர் மாதத்திற்கான இலவசமாக சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புரட்டாசி முடிந்து 3 நாட்கள் ஆகிவிட்டன. புரட்டாசி என்பது ஏழுமலையானுக்கு உகந்த மாதம். இதனால், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் கொரேனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. 300 ரூபாய் தரிசனம், இலவச தரிசனம் ஆகியவை உள்ளிட்ட வகைகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


இதனால் திருப்பதி மலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. இதுதவிர டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல முடியும் என்ற நிலையும் அமலானது.




இந்நிலையில் புரட்டாசி முடிந்துவிட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ. 300 கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகளும், நவம்பர் மாதத்திற்கான இலவசமாக சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ. 300 கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல்,  இலவசமாக சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் (அக்.23) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. 


டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் டிக்கெட்:


இது மட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 கட்டணத்தில் ஏற்கெனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில் அது தற்போது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும், இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.