மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களான, நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னக ரம் ஸ்ரீகுடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.
இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கருட சேவை உத்ஸவம் இன்று அதிகாலை நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு முதல் நாள் நேற்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில் நேற்று மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை மணிக்கு மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர்.
தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒரு வராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று. பின்னர் கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலாகாட்சி நடைபெற்றது. கருடசேவையில் தமிழ்நாடு மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருவாங்கூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
சென்னை திமுக வட்ட செயலாளர் கொலையில் ‛மெகா’ திட்டம்... அதிமுக வேட்பாளரிடம் தீவிர விசாரணை!