அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளும் நேற்று பிப்.1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.  திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். விரைவில் திரையரங்குகளுக்கான கட்டுப்பாடுகளும் விலக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படத்துக்கான புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வந்ததிலிருந்து ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. அஜித் ரசிகர்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கின்றனர். வெளியாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தாலும் இப்போதே டிக்கெட் வாங்குவது பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதில் நடிகர் சுகுமார் முதல் ஆளாக வரிந்து கட்டி நிற்கிறார். சுகுமார் நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறார். அவர் நடிப்பு காதல் திரைப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது, அதில் பரத்திற்கு உதவி செய்யும் நண்பராக வருவார். அவர் சமீபத்தில் இட்டிருந்த பதிவில் ஒரு வலிமை திரைப்படத்தின் சீக்ரெட்டையும் உடைத்துள்ளார். அதாவது நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களது மகன் சந்துரு வலிமை திரைப்படத்தின் அசோசியேட் என்பது தான் அந்த சீக்ரெட்.






செந்தில், கவுண்டமணியோடு இணைந்து செய்த காமெடி சீன்கள் இன்றளவும் பெரும் ஆசுவாசமான காட்சிகளாக மனதில் நிற்கின்றன, அவற்றைக் கண்டு இன்றும் விழுந்து விழுந்து சிரிகிறோம். தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி என்று போற்றப்படுபவர்கள் இந்த ஜோடி. இதில் இருவருமே இப்போது சேர்ந்து படங்களில் நடிப்பதில்லை. கவுண்டமணி சில வருடங்கள் முன்பு சில படங்களில் ஹீரோவாக நடித்தார், ஆனால் அது எதுவும் சரியாக போகாததால் நிறுத்திக்கொண்டார். செந்தில் அவ்வப்போது சில படங்களில் தோன்றி வந்தாலும், பிசியாக நடித்துக்கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் வலிமை திரைப்படத்தின் அசோசியேட் டைரக்டர் என்ற செய்தி நடிகர் சுகுமார் மூலமாக தெரிய வந்துள்ளது.


அவர் நடிகர் செந்திலின் வீட்டிற்கு சென்று அவரது மகனை கண்டு டிக்கெட் வாங்கி வரலாம் என்று சென்றிருக்கிறார், ஆனால் மகன் சந்துரு வலிமை வெளியீட்டு வேலையாக வெளியில் சென்றிருந்திருக்கிறார். ஆனால் அப்போது வீட்டில் இருந்த நடிகர் செந்திலுடன் ஒரு செல்ஃபி எடுத்து திரும்பியுள்ளார்.அவர் பதிவில் எழுதியதாவது, "வலிமை படம் ரிலீஸ் தேதி  பார்த்த உடனே உடலில் அவ்ளோ வலிமை... உடனே செந்தில் அண்ணே வீட்டுக்குப் போனேன்..(அவர் வீட்ல நானும் அவருக்கு புள்ள மாதிரி) "வாடா தம்பி என்ன இப்போதான் கூகுள்ல வீட்டுக்கு வழி காட்டுச்சான்னு கிண்டல் பண்ணாரு.. மனுசன் அவ்ளோ அப்டேட்டு. இல்லன்னே சந்துருவ பாக்க வந்தேன். வலிமை படத்தின் அஸோஸியேட் இயக்குனர் சந்துரு அவரது இரண்டாவது மகன் ... மண்ட பூரா ஐடியா மன்னன். ரிலீஸ் பிஸி.. அதான் ஆபீஸ் போய்ட்டான்னு சொன்னாரு..! "சரி டிக்கெட்டுக்கு தான் வந்தேன், செல்பி போடலாம் வாங்கன்னு இன்னிக்கு எடுத்த படம். #அண்ணே வேற லெவல் எனர்ஜி!!!!" என்று எழுதியுள்ளார்.