திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் தென்கரையில் 100 மீட்டர் அளவு சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இந்த நிலையில் இடிந்து விழுந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட எஸ்பி விஜயகுமார், மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக ஆய்வு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் 24 மணி நேரமும் 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 20 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதனையடுத்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இடிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவரை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு தெரிவித்ததாவது...
கமலாலய குளத்திற்கு என்று நீண்ட நெடிய வரலாறு ஒன்று உள்ளது. எந்த ஆண்டு கட்டப்பட்ட கோயில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்ட கோயில் என்ற வரலாறு இதுவரை இல்லை. கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் 101 அடி அளவில் இடிந்து விழுந்ததை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலைத்துறை யோடும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக விழுந்த இந்த மதில் சுவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், மேலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது நீராட வருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், இன்றைக்கு இந்த இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு இரண்டு முறை இந்த கமலாலய குளத்தில் சுற்றுசுவர் இடிந்து விழுந்துள்ளது. உடனடியாக அது சீர்செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தற்பொழுது 101 அடி அளவிற்கு மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது மேலும் 40 அடி அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக இடிந்து விழுந்த இடத்தை கட்டுவதற்கும் மேலும் கமலாலயக் குளத்தின் முழு சுற்றுச்சுவரின் தன்மையை வல்லுனர்கள் கொண்ட குழு மூலம் ஆராய்ந்து போதிய அளவு நிதி பெற்று நிரந்தரமான ஒரு தீர்வு காண முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி முடிக்கப்படும்.
திருவாரூரில் உள்ள கல் தேரை பொறுத்தளவில் சுற்றி மரங்களை நடுவது, செடிகளை நடுவது என்ற பணிகள் நடைபெற்றுள்ளன. 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில் என்பதால் நீதிமன்ற குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குழு, மாநில தொல்லியல் குழு, இந்த மூன்று குழுக்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குழுவின் அனுமதிக்காக காத்து உள்ளோம். 18.9 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கல் தேர் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்த சதவீதத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஐந்து மாதங்களில் கண்டுபிடித்த சதவிகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களை விட 40 சதவிகிதம் சிலைகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐடியல் குழுவினரோடு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஓராண்டு திமுக ஆட்சி நிறைவு பெறுகின்ற பொழுது, எத்தனை சிலைகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டதை மீட்டு எடுத்துள்ளோம், எத்தனை சிலைகள் கடத்தலை தமிழ்நாட்டிலிருந்து கடத்த முடியாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறோம், என்கிற விபரங்களை நிச்சயம் அளிப்போம்.
கடந்த ஆட்சி காலத்தில் 3081 இடங்களில் சிலைகள் பாதுகாப்பு அரை கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள். அதற்கான அரசாணை 2017 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அரசாணை வெளியிட்டு தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பொழுது சிலைகள் பாதுகாப்பு அறை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 85 சிலைகள் பாதுகாப்பு அறைகள் வெகுவிரைவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டி முடிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட எஸ்பி விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.