உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தைமாதம் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் திருவிழா  நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய விழாவானது திருவூடல் திருவிழாவாகும். இந்த திருவிழா தை மாதம் இரண்டாம் நாளான இன்று திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் வீதியில் சமேத உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.



இந்த திருவூடல் கணவன்-மனைவிக்கு இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் பின்னணியானது, பிருங்கி மகரிஷி முக்தி அடைவதற்கு அண்ணாமலையார் நேரில் காட்சியளித்து முக்தி அளிக்க விரும்புவதால் தான் சென்று காட்சி அளிக்க போவதாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனிடம் கூறுகின்றார். இதற்கு அம்மன், முனிவர் தன்னை வணங்காமல் உங்களை மட்டுமே வணங்குகிறார் ஆகையால் நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று கூறுவதால் இருவருக்கும் இடையே உடல் ஏற்படுகின்றது. தற்போது கொரோனா தொற்று பரவல் நடவடிக்கைக்காக நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஊடல் நிகழ்ச்சி இன்று காலையிலேயே நடைபெற்றது.



இதனை தொடர்ந்து அண்ணாமலையார் தனியாக சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க சென்றதால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக தனியே கோவிலுக்கு சென்றார். பின்னர் தன்னையே வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் தனியாக சென்று காட்சியளித்து கிரிவலம் வருகிறார். இந்த திருவூடல் விழாவினை கண்டு சாமி தரிசனம் செய்தால் மறு உடல் இல்லை என்பது ஐதீகம் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கம் இட்டு சாமி தரிசனம் செய்தனர்.



கொரோனா தொற்று பரவல் நடவடிக்கைக்காக இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே மாடவீதியில் அனுமதிக்கப்பட்டனர். திருவூடல் வீதியில் நடைபெறும் ஊடல் நிகழ்ச்சியை காண ஆன்மீக பக்தர்கள் குவிந்து இருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர். அப்போது சாமியுடன் வந்த பக்தர்கள் ஊடல் நடைபெற்றும் நிகழ்விற்கு சென்றபோது பக்தர்களுக்கும்  காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மேலும்  திருவூடல் நடைப்பெறும் பகுதியை சுற்றிலும் பேரிகார்டுகள் அமைத்து பக்தர்கள் உள்ளே வராத வகையில் காவல்துறையினர் மூலம் தடுக்கப்பட்டுது. இந்த நிகழ்விற்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.