அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்தார்.
இந்நிலையில் 8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 12 மணியளவில் 108 மகாதேவர் சன்னதி முன்பிருந்து சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் சுற்றி வந்து தனது இருப்பிடம் சேர்ந்தார். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆவணித் திருவிழாவில் 10-ம் நாளில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10-ம் நாளான நாளை மறுநாள் காலையில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்மாளும் தனித்தனிச்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.