தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயில், மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில், கணபதீஸ்வரர் திருக்கோயில், அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ஆய்வு நடத்தினார்.




திருச்செந்தூர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையிலும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பக்தர்கள் தரிசனப் பாதையில் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி, தொலைக்காட்சி வசதியுடன் சுமார் 250 பேர்கள் அமர்ந்து செல்லும் படியான காத்திருக்கும் அறைகள் அமைப்பது, தரிசன நேரத்தை குறிக்கும் வகையில் பக்தர்கள் கையில் குறியீட்டு சீட்டு (டேக்) வழங்கிடுவது, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு பேருந்து நிலையம் அருகில் இடம் ஒதுக்கி வணிக வளாகம் அமைப்பது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.




தொடர்ந்து அமைச்சர்கள் திருக்கோயில் சார்பில் கட்டபட்டுள்ள சுகாதார வளாகத்தை திறந்து வைத்தும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பாட்டிற்காக 4 பேட்டரி கார்களை கொடியசைத்து பயணித்தார். இதையடுத்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் அமைச்சர்கள் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தனர்.




பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களில் புனரமைப்பு, திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்த முதன் முதலாக அரசு சார்பில் ரூ.100 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து திருப்பணிகள் மேற்கொள்வதற்காக 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில்களை நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில் ஈரோடு, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களை ஆய்வு செய்துள்ளோம். சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில், காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில், கணபதீஸ்வரர் திருக்கோயில், அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில் ஆகிய 4 திருக்கோயில்களில் ஆய்வு நடத்தினோம்.




இந்த கோயில்கள் 700 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை ஆகும். இந்த கோயில்களில் திருப்பணிகளை இந்த மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்று கொள்ள உறுதியளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையும் உடன் இணைந்து ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் பக்தர்கள் மகிழ்ச்சியோடு வழிபடும் வகையில் திருப்பணிகள் முழுமையாக செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
 
திருச்செந்தூர் கோயிலை பொறுத்தவரை வெளிப்படை தன்மையோடு அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இங்கு ஆய்வு செய்து தெரிந்து கொண்ட விசயங்களை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்தடுத்து ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்செந்தூர் கோயிலை இன்னும் மூன்று ஆண்டுகளில் பல்வேறு வெளி மாநிலங்களில் உள்ள கோயில்களுடன் ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு, பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் இருக்கும் திருக்கோயிலாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


திருச்செந்தூரில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் குறித்து முதல்வரே நேரடியாக ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இக்கோயிலில் திருப்பணிகளை ஓரிரு மாதங்களில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்வர் தனது பணிகளுக்கு இடையே நேரம் கிடைப்பதை பொறுத்து திருப்பணிகளை நேரில் வந்து தொடங்கி வைப்பதா அல்லது அங்கிருந்தே தொடங்கி வைப்பதா என்பது முடிவு செய்யப்படும்.




திருச்செந்தூர் கோயிலில் திருப்பணிகளை ஹெச்சிஎல் நிறுவனமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து செய்வதாக தெரிவித்துள்ளோம். சுமார் ரூ.175 கோடி அளவுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. முழுமையான மதிப்பீடு இன்னும் தயார் செய்யப்படவில்லை. முழுமையான மதிப்பீடு தயார் செய்யப்பட்டதும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு, அறநிலையத்துறையின் பங்கு, பக்தர்களின் பங்கு போன்றவை முடிவு செய்யப்பட்டு ஒரு பெரிய தொகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.




இதேவேளையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்யப்படும். இக்கோயிலுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 60 முதல் 70 லட்சம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்யும் இடம் குறுகலாக இருப்பதால் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை போக்க புதிய மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளோம். அதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அவசியமான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்படும். இங்கே கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை இந்த ஆண்டுக்குள் கட்டி முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.