தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்பவனி ஆகஸ்ட் 15 அதிகாலை நடைபெறுகிறது. 




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி ஆலயத்திற்குள் மட்டும் நடத்தப்பட்டது.




கொரோனா தொற்று குறைந்த இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இரவு கொடியேற்றத்துடன் விண்ணேற்பு பெருவிழா தொடங்கியது. இதை முன்னிட்டு ஆயர் வரவேற்பு மற்றும் நற்கருணை, சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தன. இதனை தொடர்ந்து ஆலயம் முன்பு கொடிமரம் நடப்பட்டது. கொடிமரத்தில் முதலாவதாக ஆலயக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகளும் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 




கொடியேற்றத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி,  முன்னாள் ஆயர்ஜூடு பால்ராஜ், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வரும் 15ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதையெடுத்து விரதமிருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.




காமநாயக்கன்பட்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் மற்றும் காமநாயக்கன்பட்டி எட்டுநாயக்கன்பட்டி குருவி நத்தம் செவல்பட்டி இறை மக்கள் செய்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண