தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார்சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளும் உள்ளனர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.


கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. மேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.




இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.


அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.


கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். 4 டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.  நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது.




இத்தகைய சிறப்பு பெற்ற நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு  கல் கருட சேவை நடைபெற்றது. அப்போது கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து முதலில் 4 பேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கல் கருடபகவானை தோளில், வீதியுலா புறப்பாடு தூக்கி செல்வார்கள். இதில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.


தொடர்ந்து  விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்தி பெற்ற கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.  மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து  கருடபகவானை சுமந்து வந்தனர்.  கருடபகவான் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.