வருகின்ற  சித்திரை 1 ஆம் தேதி (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார்.  மகர ராசி நேயர்களுக்கு அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.


மகர ராசி நேயர்களே..!


மகரத்தைப் பொறுத்தவரை இப்போது தான் ஜென்ம சனியின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளீர்கள். இப்போது இரண்டாமிடத்தில் (கும்பம்) சனி வரும்போது உங்களுக்கு லாபம் தான். முதலீட்டில் லாபம், கொடுத்த பணம் வசூலாவது, வியாபார பெருக்கம் என பொருளாதார ஏற்றம் இருக்கும். சனியின் காரணத்தினால் குடும்பத்தில் புதிய வரவு ஒன்று இருக்கும். உங்களுடைய மற்றும் தாயாருடைய உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 


சொத்துக்குள் குவியும். வீடுகள், நிலங்கள், புதிய தொழில்கள் தொடங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அக்டோபர் 31 ஆம் தேதிக்குப் பிறகு 3 ஆம் இடத்திற்கு ராகு வருகிறது. அது குருவுடைய வீடாக இருப்பதால் மூக்கு, தொண்டை, வாய் பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்.  வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். ராகு மன சஞ்சலம், தேவையில்லாத பிரச்சினை, எண்ணங்களை கொடுப்பார். அதனால் இளைய சகோதரன்/ சகோதரிகளின் உடல் நிலையில் கவனம் தேவை. 


அதேசமயம் முக்கியமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்கும். வெளிநாடு பயணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ரகசியங்களை பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடுவதில் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக செயல்படவும். 


உத்திராடம் நடத்திரத்தில் பிறந்திருக்கக்கூடியவர்கள் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கை துணை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார ஏற்றம் உண்டு. வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. 


திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் எந்தவொரு செயலையும் பொறுப்புடன் செய்யக்கூடிய நிலை ஏற்படும். தலைமைப் பதவிகள் கிடைக்கலாம்.


அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் ஏற்படும். வேலை மாற்றம் நிகழும். திரையுலகில் இருப்பவர்களுக்கு சிறந்த காலமாக அமையும். உடல்நிலை பாதிப்புகள் சரியாகும். வாகன யோகம் உண்டாகும். 


வழிபாடு: ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் தாயாரின் சன்னதிக்கு சென்று வழிபட்டு விட்டு யானைக்கு சாப்பாடு தானம் செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும். இதனை உங்களது ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது மிகவும் சிறப்பு.  இதேபோல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பசுநெய் தானம் செய்யலாம்.