அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் தொடங்கி வருகின்ற 29ம் தேதி வரை நீடிக்கின்றது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலில் உள்ள சிவ லிங்கத்திற்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தாரா பாத்திரம் அமைக்கப்பட்டது. இதே போல் சிவலிங்கம் உள்ள அனைத்து கோயிலில்களிலும் அக்னி நட்சத்திரம் முடியும் வரை தாரா பாத்திரம் அமைக்கப்படும்.
இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
எனவே அக்னி நட்சத்திர நாட்களில் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்தும், விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாரா அபிஷேகமாகும்.
தாரா அபிஷேகம் என்பது சிவலிங்கத்துக்கு மேல் ஒரு பாத்திரம் கட்டி, அதன் அடியில் சிறு துளையிட்டு, அதில் இருந்து சொட்டு, சொட்டாக லிங்கம் மீது தண்ணீரை விழ வைப்பதாகும். இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டு தோறும் அக்கினி நட்சத்திர நாட்களில் தினமும் ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையின்போது அண்ணாமலையார் மீது தாரா அபிஷேக பாத்திரம் தொங்க விடப்படும்.
சாயங்காலம் சாயரட்சை பூஜை நடக்கும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு, சொட்டாக தாரா பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனைத் திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் ழுமுமையாக பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள்.
அண்ணாமலையாருக்கு வழக்கமாக சாற்றப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம் பெறாது. இதன் காரணமாக தாரா அபிஷேகம் தண்ணீரை பெற்று அண்ணாமலையார் குளிர்ச்சி பெறுகிறார். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் அனைத்து சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.