Staircase Vastu: ஜோதிட சாஸ்திரப்படி வீடு கட்டும்போது வாஸ்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக, வீட்டில் படிக்கட்டுகள் என்பது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி மாடிப்படிக்கட்டுகளானது ஒருவர் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லும் வெற்றிப்படிக்கட்டுகளாக கருதப்படுகிறது.


மாடிப்படிக்கட்டுகள்:


இதனால், வீட்டில் மாடிப்படிக்கட்டுகளை கட்டும்போது மிக கவனமாக கட்ட வேண்டும்.  கடிகார முறையில் மாடிப்படிக்கட்டுகளை கட்ட வேண்டும். அதாவது, படியில் ஏறுபவர்கள் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போல படிக்கட்டுகள் கட்ட வேண்டும்.


இதைவிட மிக மிக முக்கியமான ஒன்று மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவர்கள் விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அதை உடனடியாக கவனித்து சீர் செய்ய வேண்டும். மாடிப்படியின் கைப்பிடியில் விரிசல் இருப்பது வாஸ்து ரீதியாக மட்டுமின்றி, கட்டுமான ரீதியிலும் அது பாதுகாப்பற்றது ஆகும்.


ஒற்றைப்படையில் படிக்கட்டுகள்:


மேலே கூறியவாறு அனைவராலும் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை கட்ட முடியுமா? என்றால் அது சாத்தியமற்றது. அவ்வாறு கட்ட இயலாதவர்கள் படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் படியின் இருபுறங்களிலும் பூந்தொட்டிகளை வைக்கலாம். அந்த பூந்தொட்டிகள் பிளாஸ்டிக்கால் ஆனதாக இல்லாமல் உயிருள்ள பூக்களாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.


அதேபோல, வீட்டிற்கு உள்ளே மாடிப்படிக்கட்டுகளை அமைக்கும்போது தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கக்கூடாது. அதற்கு மாறாக வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். படிக்கட்டுகளின் எண்ணிக்கை எப்போதும் ஒற்றைப்படையில் இருப்பது அவசியம் ஆகும்.


அதாவது லாபம் – நஷ்டம் – லாபம் கணக்குப்படி 11, 13, 15, 17 அல்லது 19 படிக்கட்டுகள் இருப்பது நல்லது ஆகும். இந்த எண்களில் மாற்றம் இருந்தாலும் ஒற்றை இலக்கத்தில் படிக்கட்டுகளை அமைக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.


வண்ணங்கள்:


வீட்டின் தலைவாசலுக்கு எதிராக மாடிப்படிகள் அமைந்திருந்தால், எண்கோண கண்ணாடியை தலைவாசலுக்கு மேலே பொருத்தலாம். இல்லாவிட்டால் பெங்சூயி பாகுவா கண்ணாடியை தலைவாசலுக்கு மேலே பொருத்தலாம். இந்த கண்ணாடியை ஏன் பொருத்த வேண்டுமென்றால், இவ்வாறு கண்ணாடியை பொருத்துவதால் அந்த கண்ணாடியில் படிகள் எதிரொலிப்பதால் வாஸ்து பாதிப்பு நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


வீடுகளில் ஒவ்வொரு அறைக்கும் வண்ணங்கள் எந்த நிறங்களில் பூசுகின்றனர் என்பது மிக மிக முக்கியம் ஆகும். அதற்கு மாடிப்படிக்கட்டுகளும் விலக்கு அல்ல. பூஜையறை, சமையலறையை ஒட்டியவாறு படிக்கட்டுகள் இருந்தால் அதற்கு வெளிர் நிறங்களில் வண்ணம் பூச வேண்டும். அடர் வண்ணங்களில் வண்ணம் பூசக்கூடாது.


ஈசானிய திசையில் மாடிப்படிகள் அமைந்திருந்தால் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் செம்பு பாத்திரத்தில் பூந்தொட்டி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் மலர்களை போட வேண்டும். அந்த பூக்கள் பிளாஸ்டிக் பூக்களாக இல்லாமல் வாசமுள்ள மலர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு வீட்டின் மாடிப்படிக்கட்டுகளை கட்டுவதற்கான அமைப்பு குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.