திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் நேற்று இரவு எழுந்தருளிஅருள்பாலித்தார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்புமிக்கது. அதன்படி, பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.
அதையொட்டி, அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், அண்ணாமலையார் கோயில் 5 ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, காலை 9 மணி அளவில் சிறப்பு பூக்களால் நடராஜ பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அப்போது, கடந்த மாதம் கார்த்திகை தீபத்தன்று 19 ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது காட்சியளித்த மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீபமை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னர், அலங்கார ரூபத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து 5 ஆம் பிரகாரத்தில் புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திருவண்ணாமலையில் திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசக பெருமானும் மாடவீதியில் வலம் வந்தார். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவ மூர்த்திகள் வீதியுலா புறப்பாடு எப்போதும் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், நடராஜர் வீதியுலா புறப்பாடு மட்டும் திட்டிவாசல் வழியாக நடைபெறுவதில்லை. அதற்கு மாற்றாக, தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் வீதியுலா புறப்பாடு நடைபெறுவது மிகவும் தனிச்சிறப்பாகும்.
மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மாடவீதியில் சுவாமி வீதியுலா நடைபெற விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால், நடராஜர் வீதியுலா இன்று காலை மாட வீதியில் நடைபெற்றது . இந்நிலையில், ஆருத்ரா விழாவில் சுவாமிக்கு தீப மை அணிவிக்கப்பட்ட பின்னர், மகாதீப நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு வரும் 28 ஆம் தேதி முதல் தீபமை வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள், அதற்கான ரசீதை காண்பித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த ஆருத்ரா தரிசனத்தில ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்