ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கான ராசிக்கல் மாணிக்கம். மாணிக்க சிவப்பு ஜூலை மாத கோடை வெயிலை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இந்த நவரத்தினக்கல்லை பூமியின் இதயம் என அழைக்கின்றனர். இது தீர்க்கமான லட்சியம், வளம், பாதுகாப்பு ஆகியனவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கடக ராசிக்காரர்களுக்கு மாணிக்கம் தான் ராசிக்கல். மாணிக்க கற்களை பழங்கால போர் வீரர்கள் முதல் இந்துக்கள், சீனர்கள் என பலரும் கொண்டாடியுள்ளனர். 


இப்படித்தான் உருவாகின்றன நவரத்தினங்கள்:


மரகதம், நீலம், போன்ற கற்கள் எப்படிக் கனிவளமாகப் புவியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றனவோ அவ்வாறுதான் மாணிக்கமும் எடுக்கப்படுகிறது. மரகதம், மாணிக்கம், நீலம், இவை மணலின் (சிலிகானின்) சேர்மம். வைரம், வைடூரியம் கரியின் (Carbon) வகை. முத்து, பவளம், கோமேதகம், ஆகியன மணல், சுண்ணாம்புகளின் சேர்மம்.


இதில் மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.


யார் மாணிக்கக் கல் அணிய வேண்டும்?


அரசுப் பதவிகளில் உச்சம் தொட விரும்புவோர் தான் மாணிக்கக் கல் மோதிரம் அணிய வேண்டும். அதை அணியும் முன் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அவர்களைத் தவிர பொறியாளர்கள், நடிகர்கள், வணிகர்கள், ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், பங்குவர்த்தகர்களும் மாணிக்க அணியலாம் என சொல்லப்படுகிறது


மாணிக்கம் வாங்கப் போறீங்களா?


அதான் யார் யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா நான் அந்தப் பட்டியலில் இருக்கிறேன். அதனால் மாணிக்கம் வாங்கப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள். இதையும் வாசித்துவிட்டு கிளம்புங்கள். மாணிக்கம் வாங்கும் முன்  4 Cs கவனிக்க வேண்டும். அதாவது நிறம் (colour), வெட்டு (cut), தெளிவு (clarity), மற்றும் கேரட் (carat) ஆகியனவற்றை கவனித்து பரிசோதித்து வாங்க வேண்டும். ஒவ்வொரு மாணிக்கக் கல்லிற்கும் தனித்துவம் இருக்கும். அதை கவனித்தே வாங்க வேண்டும். கத்தரிக்காய் போல் வாங்குவது அல்ல மாணிக்க கல் என்கிறார்கள்.


மாணிக்கம் அணிந்தால் சொல்லவேண்டிய மந்திரம்:


நீங்கள் மாணிக்கக் கல் அணிபவர் என்றால் சூரியனைப் போற்றும் மந்திரத்தை சொல்ல வேண்டும். ஆதித்ய ஹ்ருதய் ஸ்தோத்திரம், காயத்ரி மந்திரம் ஆகியனவற்றை சொல்ல வேண்டும். ஓம் ஹ்ரிங் ஹம்ஷ சூர்யாயே நமஹ ஓம் ‘Aum Hring Hamsah Suryaye Namah Aum'  என்ற மந்திரத்தை அன்றாடம் 108 முறை சொல்ல வேண்டும் என நம்பப்படுகிறது