ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்தில் பிரவேசிக்கிறார். மிதுனம் என்பது  கால புருஷனுக்கு மூன்றாம் பாவம்; அதாவது  வெற்றி பெறுவது, நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பது, இளைய சகோதரத்தைக் குறிக்கும், புதன் வீடாக இருப்பதால் புத்தி கூர்மை,  அறிவு,  ஆற்றல்,  படித்த மேதைகள்,  கணக்கு வழக்கு,  தொடர்பு கொள்ளுதல்,  நீண்ட தூர பிரயாணம், சதுரயமாக பேசுதல்,  சாமர்த்தியமாக நடந்து கொள்ளுதல்,  இயல்,  இசை,  நாடகம்,  காதல்,  நகைச்சுவை   போன்ற பலவிதமான தன்மைகளை உள்ளடக்கியது மிதுனம். மிதுன ராசியில் எந்த கிரகமும் நீச்சம் பெறுவதில்லை:உச்சம் பெறுவதில்லை.ஒரு ராசியில் எந்த கிரகமும் நீச்சம் பெறாமல் இருப்பதே அந்த ராசி சுத்தமான ராசி என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ராசியில் தான்  சூரியன் பிரவேசிக்கிறார். அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, ஆனி மாதத்தில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன நன்மைகள் நடக்க இருக்கிறது என்று இக்கட்டுரையில் காணலாம். 


 மேஷ ராசி:


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாகத்தில் சூரியன் பிரவேசிப்பதும்  உங்களின் நான்காம் வீடான கடகத்தில் 3 கிரகங்கள் சஞ்சாரம் செய்வதும் மிக சிறப்பான பலன்களை  கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக,  நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி அடையக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஒருவேளை உங்களுக்கு நான்காம் அதிபதி தசையோ அல்லது புத்தியோ நடக்குமாயின் வீடு,  நிலம்,  இடம், கடை வைத்தல் வியாபாரம் செய்தல் போன்றவை மிக சாதகமான பலன்களை தரும். அதன் மூலம் செல்வாக்குள்ள வாழ்க்கையையும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. தைரியமும் தன்னமிக்கையும் கூடும். 


ரிஷப ராசி:


 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு  சூரியன் இரண்டாம் வீட்டில் பிரவேசிக்கிறார். குடும்ப ஸ்தானம் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடையக்கூடிய  செல்வங்களை கொடுக்கக்கூடிய இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சாரம். ஏற்றமான வாக்கு வன்மையை உங்களுக்கு கொடுக்கும். குறிப்பாக,  உங்களின் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். நீங்கள் எதை பேசினாலும் அதை மற்றவர்கள் அமைதியாக கேட்கும் தன்மை ஏற்படும். அதேபோன்று உங்களுடைய ராசி அதிபதி இரண்டாம் வீட்டிலும் உங்களுக்கு மூன்றாம் வீட்டிலும் மாறி மாறி சஞ்சாரம் செய்வது மிகப் பெரிய தனயோகத்தை கொண்டு வரும்.


  மிதுன ராசி:


 மிதுன ராசி அன்பர்களே..ராசியிலேயே சூரியன் சஞ்சாரம் செய்வது புகழைக் கொண்டு வரும்.  குறிப்பாக மிதுன ராசியினர் வெளி உலகத்திற்கு தெரியாமல் பல திறமைகளை மறைத்து வைத்திருக்கலாம்.  அப்படிப்பட்ட திறமைகள் ஆனி மாதத்தில் வெளிப்படக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உங்கள் வீட்டின் மூன்றாம் அதிபதி சூரியன் ராசியிலேயே அமர்ந்து உங்களுடைய ராசி முழுவதற்கும் ஒளியை கொடுக்கப் போகிறார். ஒளி இருக்கும் இடத்தில், புகழ் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்  உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கடகத்தில் 3 கிரகங்கள் அமர போகின்றன. அவை அத்தனையும் உங்களுடைய சொல்வாக்கை  உயர்த்தப் போகிறது.


 கடக ராசி:


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.  குறிப்பாக எந்த காரியத்தை தொட்டாலும் அதில் இருவரின் நிலை நீடித்து வந்ததல்லவா,  அந்த நிலை மாறி ஆனி மாதத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.  செலவுகளை  கட்டுப்படுத்த நினைத்தாலும் சுபகாரியங்கள் மூலமாக  செலவுகள் ஏற்படத்தான் செய்யும். குறிப்பாக குடும்பத்தோடு நீண்ட பயணங்களை மேற்கொண்டு அதன் மூலம் நல்ல மன நிம்மதியை அடைவீர்கள்.   சிலர் வெளிநாடு வெளி மாநிலம் செல்ல வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு ஆனி மாதம் ஒரு சிறப்பான மாதம் அதற்கான ஏற்பாடுகளை செய்தால் உடனடியாக காரியங்கள் நடைபெறும்.


சிம்ம ராசி :


 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் அமர்கிறார்.  சொல்லவே தேவையில்லை; வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நீங்கள் முயற்சி செய்யாமலேயே கிடைக்கும் வாய்ப்பு ஆனி மாதத்தில் கிடைக்கும்.  ராசி அதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்வது உங்களுக்கு மிகப்பெரிய புகழையும் கவுரவத்தையும் கொண்டுவரும்.   குறிப்பாக  எழுத்து தேர்வுகளில் அரசாங்க உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சிம்ம ராசியினருக்கு இதோ அது தொடர்பான வேலைகள் உங்களை வந்து சேரும். ஏற்கனவே பத்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து நீங்கள் செய்யும் காரியங்களிலும் வேலையிலும் சற்று சோர்வையும் கொடுத்தாலும் வருகின்ற நாட்கள் உங்களுக்கு ஏற்றம் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  கன்னி ராசி :


 அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு சூரியன் பத்தாம் வீட்டில் அமர்கிறார்.  12 ஆம் அதிபதி பத்தாம் வீட்டில் அமர்வதால்  காய்கறி வியாபாரங்கள் செய்யும் திரவ பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருவோருக்கு அமோகமான காலகட்டம் இது. நீங்கள் நினைக்கும் வியாபாரத்தை எட்டி அதன் மூலம் வருவாயை சம்பாதிக்கலாம். கன்னி ராசியில் ஏற்கனவே கேது அமர்ந்து  சற்று சோர்வை தந்தாலும்  குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து அவருடைய பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் சங்கடங்கள் வருவது போல இருக்கும்; ஆனால், அவை விலகிடும்.  புதிய வாகனம் வாங்க வாய்ப்புண்டு. திருமணம் கைக்கூடும். 


  துலாம் ராசி:


 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் சூரியன் அமர்கிறார்.  ஏற்கனவே துலாம் ராசிக்கு அஷ்டமஸ்தானம் ஆன எட்டாம் வீட்டில் குருபகவான் அமர்த்து சற்று நிம்மதியின்மையை கொடுத்தாலும் வேறு சில விஷயங்களால் ஆதாயத்தை கொண்டு வருகிறார்.  குறிப்பாக குடும்ப ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிட்டும.  உங்களுடைய லாப அதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சுற்றுலா ஆன்மீக  சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு உண்டு. 


  விருச்சக ராசி:


 அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  எட்டாம் வீட்டில் சூரியன் பிரவேசிப்பது எதையோ இழந்தது போல உங்களுக்கு தோன்றலாம் குறிப்பாக தொழில் ஸ்தான அதிபதியான  பத்தாம் அதிபதி.  எட்டாம் வீட்டில் மறைவது திடீர் அதிர்ஷ்டத்தையும் தனயோகத்தையும் கொண்டு வரலாம்  குறிப்பாக மூன்று நட்சத்திரங்கள் அஷ்டமஸ்தானமான எட்டாம் பாவத்தில் உள்ளது அவை மிருகசீரிட நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் புனர்பூச நட்சத்திரம் 3 நட்சத்திரங்களிலும் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் உங்களுக்கு ஏற்றமான பலன்களே கிடைக்கும் தவிர அவமானம் ஒன்றும் ஏற்படாது. . வீணாக யாரேனும் உங்களிடத்தில் வம்பு பண்ண முயற்சி செய்தால் அவர்களிடத்திலிருந்து விலகி இருங்கள்.   ஏற்கனவே குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசியை பார்த்து  சகல சௌபாக்கியங்களோடு உங்களை வைத்து இருப்பார் அதே சமயத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள் அந்த உழைப்புக்கேற்ற பலரை நீங்கள் அனுபவிக்கலாம்.


 தனுசு ராசி:


 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே,  உங்களுக்கு ஏழாம் வீட்டில் சூரியன் பிரவேசிக்கிறார்.  இது அருமையான யோக காலகட்டம்; ஒன்பதாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சோர்வாக இருந்த உங்களுக்கு சுறுசுறுப்பு கூடும்.பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சங்கடங்கள் வந்தாலும் ஏழாம் கட்டத்தில் இருக்கும் சூரியனின் ஒளி உங்கள் ராசியை பிரகாசிக்க செய்வதால் அடுத்தவர்கள் உங்களுக்கு உதவ அவர்களாகவே முன் வருவார்கள். நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவது,  மிகப்பெரிய யோகத்தையும் செல்வாக்கையும் கொண்டு வரும்.  குரு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து நோய் எதிரி கடன் போன்றவற்றில் சற்று  தாமதமான பலன்களை ஏற்படுத்தினாலும் ஏழாம் பாவத்தில் ஆடி மாதத்தில் அமரக்கூடிய சூரியன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் எதிலும் வெற்றி அடையக் கூடிய வாய்ப்புகள் கிட்டும்.


 மகர ராசி:


அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆறாம் பாவத்தில் சூரியன் அமர்ந்து மிகப்பெரிய யோகத்தை கொண்டு வருகிறார். சூரியன் 3 6 11 போன்ற இடங்களில் அமர்வது மூலம் ஜாதகருக்கு செல்வ செல்வாக்கையும் புகழையும் கொண்டு வந்து சேர்ப்பார் . அதேபோல மிதுன ராசியில் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமரும் சூரியன் நிச்சயமாக மருத்துவத்தின் மூலமாக மிகப்பெரிய மாற்றத்தை உங்களுக்கு உண்டாக்குதல் கடன் இருந்தால் அவற்றை அடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துதல்   புதிய மாற்றங்கள்  ஏற்பட.  சூழ்நிலையை உருவாக்குதல் போன்ற சாதகமான பலன்கள் நடைபெறும் .   ஏற்கனவே குரு பகவான் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் மற்றவர்களின் கண்களுக்கு நீங்கள் மிகப்பெரிய ஸ்டாராகத்தான் தெரிவீர்கள். .  இந்த ஆனி மாதமும் உங்களுக்கு சாதகமான மாதமே.


கும்ப ராசி:


 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் அமர்ந்து எதிலும் வெற்றியைக் கொண்டு வருகிறார். குறிப்பாக ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டில் அமர்வதால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.  குறிப்பாக  நீங்கள் எதிர்பார்த்த வரன் உங்களுக்கு அமையும். ஏற்கனவே குரு பகவான் நான்கில் அமர்ந்து  இடம் விட்டு இடம் போக செய்வார் சிலருக்கு,   அதே சமயத்தில் தொழிலில் வெற்றிகள் கிடைக்கும் பலருக்கு.   கும்ப ராசியை பொறுத்தவரை சூரியன் ஐந்தில் அமர்வது யோக நிலையை கொண்டு வரும்.   நீண்ட நாட்களாக குணப்படுத்த முடியாத வியாதி ஏதுவாக இருந்தாலும் அது தற்போது மருத்துவத்தின் மூலம் குணமாகும்.


 மீன ராசி :


  அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் அமர்கிறார் ஆறாம் வீட்டுதிபதி நான்காம் வீட்டில் அமர்வதன் மூலம்,  பழைய வீட்டை புதுப்பித்தல், பழைய வாகனம் கொடுத்து புதிய வாகனம் வாங்குதல்.   கடன் மூலமாக  நிலம் வீடு தொடர்பான காரியங்களை சாதகமாக முடித்துக் கொள்ளுதல்.  கடன் வாங்கி புதிய வாகனம் வாங்குதல் போன்ற பலன்கள் ஏற்படும்.   ஆனி மாதத்தை பொருத்தவரை  ஆறாம் அதிபதி சூரியன் நான்காம் பாவத்தில் அமரும்போது  அடுத்தவர் உங்களுக்காக உழைப்பதன் மூலம் அதன்  பெரும் பொருளை நீங்கள் சம்பாதிக்க முடியும். அமைதியை நோக்கி மனம் செல்லும்.   புதிய மாற்றத்திற்கான வழி வகைகள் ஏற்படும்.   தொழில் மாற்றம் இடமாற்றம் உண்டாகும்.   செல்வம் செல்வாக்கு உயரும்.   அடுத்தவர்கள் உங்களை மதிக்கும்படி இருக்கும்.