வறண்ட மாவட்டம் என்பதால் ராமநாதபுரத்திற்கு எப்போதுமே மழை தேவை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வானம் பார்த்த பூமியாக மழைத்துளிக்கு காத்திருக்கிறது ராமநாதபுரம். ஊரே வெள்ளக்காடாய் போனாலும் ஒரு சொட்டு தண்ணீர் தரையில் படாத என காத்திருப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையையும், விவசாயத்தையும் ராமநாதபுரம் மக்கள் கைவிடவில்லை.
இறைவழிபாடுகள் மூலம் மழைக்காக ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் நம்பிக்கையில் இருந்து அவர்கள் பின் வாங்கவில்லை. மழைக்காக பொதுவாக பல்வேற வினோத வழிபாடுகளை இந்தியாவில் மக்கள் பின்பற்றி வருகின்றனர். கழுதைக்கு கல்யாணம், தவளைக்கு கல்யாணம் என்றெல்லாம் நாம் எத்தனையோ செய்திகளை படித்திருக்கிறோம். அந்த வரிசையில் இரு மரங்களுக்கு திருமணம் செய்து வைத்து, மழைக்காக நள்ளிரவில் மாங்கல்ய பூஜை நடத்தியிருக்கிறது ஒருகிராமம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திம்மநாதபுரம் கிராமத்தினர் தொடர்ந்து தங்கள் பகுதியில் நிலவும் வறட்சி நீங்கவும், மழை பெய்து கண்மாய் நிரம்பவும் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன் படி ஊர் கூடி, அங்குள்ள அரசமரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பொதுவாக பகலில் இந்த சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக , இரவில் மரங்களின் திருமணத்தை நடத்த கிராமத்தார் முடிவு செய்தனர்.
நாதஸ்வரம், மேளதாளம் ஏற்பாடு செய்யப்பட்டு, புரோகிதர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு திருமணம் எவ்வாறு நடைபெறுமோ அதே மாதிரி மரங்களின் மணவிழா நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் சம்மந்தப்பட்ட மரங்களை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள். அரச மரத்தை சிவனாகவும், வேம்பு மரத்தை பார்வதியாகவும் அவர்கள் அழைக்கிறார்கள். கிராமத்தில் திருமண சீர் எடுத்து மக்கள் ஊர்வலமாக வந்து மரங்களை அலங்கரித்தனர்.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, புரோகிதர்கள் மந்திரத்துடன் மரங்களுக்கு மணவிழா இனிதே நடந்து முடிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அட்சதை தூவி வாழ்த்தினர். திருமண விழாவிற்கு பின் மணமக்களை போட்டோ எடுத்துக் கொண்டனர். தீபாராதனை உள்ளிட்ட வழக்கமான வழிபாட்டு முறைகளும் நடைபெற்றது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்த வினோத திருமணம், போலீசாரின் அனுமதியில்லாமல் நடந்ததாகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படும் இந்த முறையை இந்த ஆண்டு தவிர்த்தால் தெய்வக்குற்றத்திற்கு ஆளாவோம் என்பதால் இதை யாருக்கும் இடையூறு இன்றி நடத்தியதாக ஊர் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.