Planet Parade 2024: சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, அதில் சிலவற்றை வெறுங்கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரே நேர்க்கோட்டில் வரும் 6 கிரகங்கள்:


பூமி உள்ளிட்ட 8 கோள்கள் அடங்கிய நமது  சூரியக்குடும்பம் என்பது இன்றளவும் நமக்கு முழுமையாக புரியாத, இயற்கையின் ஒரு விந்தையாகவே உள்ளது. இதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அற்புதமான, அரிய வகை நிகழ்வுகளும் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளன. கடந்த ஆண்டு ஜுன் 17ம் தேதி சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ், புதன் ஆகிய கிரகங்கள் வானில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தன. இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மனித குலத்தை மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் மிகவும் அரிய நிகழ்வு ஒன்று, வரும் ஜுன் மாதம் 3ம் தேதி வானில் நிகழ உள்ளது. இது கிரகங்களின் அணிவகுப்பு என்றும் வர்ணிக்கப்படுகிறது.


வானில் நிகழும் அரிய நிகழ்வு:


விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ”புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன. இந்த நிகழ்வை நோக்கிய பயணம் ஏற்கனவே தொடங்கிய நிலையில், மிகச்சரியாக இந்த 6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு காண வரும் ஜூன் 3ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அந்த நாளில் 6 கோள்களில் புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதம் உள்ள 2 கோள்கைளை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம்” என தெரிவித்தனர்.  பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளிலிருந்து இதனை பார்க்க முடியும். இருப்பினும் ஒளிமாசு குறைந்த இடத்திலிருந்து பார்த்தால் தெளிவாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 கோள்களையும் பார்க்க முடியுமா?


கிடைப்பதற்கரிய இந்த கண்கொள்ளா காட்சியை ஜூன் 3ம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வானில் தெளிவாக பார்க்கலாம். அதேநேரம், இது தேய்பிறை என்பதால் போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், வெறுங்கண்களால் கோள்களை பார்ப்பது என்பது சிரமமாக இருக்கலாம்.


அரிய நிகழ்வை காண்பதற்கான ஆலோசனைகள்:


6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஆராயுங்கள். பல்வேறு வானியல் இணையதளங்கள், செயலிகள் மற்றும் நாசா போன்ற நிறுவனங்கள் அல்லது உள்ளூர் ஆய்வகங்கள் வரவிருக்கும்,  கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை அடிக்கடி வழங்குகின்றன.  தெளிவான வானத்தைல், ஒளி மாசுபாடு இடத்தை தேர்வு செய்யுங்கள். மலைகள் அல்லது நகர விளக்குகளுக்கு அப்பால் உள்ள திறந்தவெளி போன்ற உயரமான இடங்கள் ஒளி மாசுபாட்டைக் குறைக்கவும், பார்வை திறனை அதிகரிக்கவும் ஏற்ற இடங்கள் ஆகும்.