மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர்  திருக்கோயிலில் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழாவை தொடர்ந்து   ராக்காயி அம்மனுக்கு  ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனை நடைபெறும்.



அதே போல் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு திருவிழா தனி சிறப்புடையதாகும். இந்த விழாவானது கடந்த 14-ம் தேதி மாலையில் தொடங்கியது. இதில் நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில்

பரமபதநாதன் சேவையுடன் நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி 2ம் நாள் திருவிழாவாக  மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்திநாதன் சேவை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைலக்காப்பு உற்சவத்தையொட்டி 16ம் தேதி  காலை 9 மணிக்கு மேல் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பாடாகி மலைப்பாதை வழியாக கோயில் யானை சுந்தரவள்ளி தாயார் முன்னே செல்ல நூபுரகங்கைக்கு புறப்பட்டு சென்றார்.



பின்னர் செல்லும் வழியில் அனுமார் தீர்த்தம், கெருட தீர்த்தம் எல்கையில் விசேஷ பூஜையும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து  அழகர்மலை நூபுரகங்கை தீர்த்த தொட்டிக்கு சென்று அங்குள்ள மாதவி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு வாசனை திரவியங்கள் அடங்கிய திருத்தைலம் சாத்தப்பட்டது. தொடர்ந்து வற்றாத நீருற்றாக வழிந்து கொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் பெருமாள் மணிக்கணக்கில் நீராடும் நிகழ்வும் திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் சுவாமி சர்வ அலங்காரத்தில் அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மீண்டும் பல்லக்கில் எழுந்தருளி வந்த வழியாகவே சென்று சுவாமி இருப்பிடம் சேர்ந்தார். முன்னதாக அங்குள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயிலிலும் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தது. இத்துடன் மூன்று நாட்கள் நடந்த திருவிழா நிறைவு பெற்றது.



கள்ளழகர் மலை அடிவாரத்தில் இருந்து மலைஉச்சிக்கு சென்று வருவது மிகப்பெரிய நிகழ்வாகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கள்ளழகர் மலை உச்சிக்குச் சென்று நூபுர கங்கையில் நீராடி பின் இருப்பிடம் சேரும் வரை சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் மலை செல்லவும், பக்தர்கள் தரிசனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் திருக்கோயில் பணியாளர்கள், காவல்துறையினர் செய்திருந்தனர்.