உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 325-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. உத்தரபிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகளை சரியாக கட்டுப்படுத்தாதது, கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. அரசு மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளது.


இந்த நிலையில், அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டான 2022-ல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஏபிபி நிறுவனமும், சி வோட்டரும் இணைந்து உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று குறித்த கருத்துக்கணிப்பு நடத்தியது.




இந்த கருத்துகணிப்பின்படி, 2017-ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி உத்தரபிரதேசத்தில் 41.4 சதவீதம் வாக்குகள் பெற்றன. அந்த மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 41.8 சதவீத வாக்குகள் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கூட்டணி கடந்த 23.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணிக்கு 6.6 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று 30.2 சதவீத வாக்குகள் அதிகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பகுஜன் சமாஜ்வாடி கட்சி கடந்த தேர்தலில் 22.2 சதவீத வாக்குகள் பெற்றது. 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6.5 சதவீத வாக்குகள் குறைவாக பெற்று 15.7 சதவீத வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 6.3 சதவீத வாக்குகள் பெற்றது. அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 1.2 சதவீத வாக்குகள் குறைவாக பெற்று 5.1 சதவீத வாக்குகளே பெறும் என்று கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.




சதவீத வாரியாக நடத்தப்பட்டது போல, தொகுதி எண்ணிக்கை அடிப்படையிலும் யார் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்றும் ஏபிபி –சி வோட்டர் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 325 இடங்களை கைப்பற்றியது. கொரோனா மற்றும் ஊரடங்கை சரியாக கையாளாத காரணத்தால் 62 இடங்கள் குறைவாக பெற்று 263 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.


ஆனால், சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணி சுமார் 65 இடங்கள் வரை அதிகரித்து 113 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துகணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.


பகுஜன்சமாஜ்வாதி கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களை கைப்பற்றியது. அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களை குறைவாக பெற்று 14 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 7 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் 8 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.




மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 259 முதல் 267 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், சமாஜ்வாதி கட்சி 109 முதல் 117 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது. ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தி இந்த கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கடந்த 2-ந் தேதி( நேற்று முன்தினம்) வரை அந்த மாநில மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது.