Meenam Raasi Puthandu Palan : 2024 - மீன ராசி வருட பலன் :
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,
மீன ராசிக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்ற பலனை இரண்டாக பிரித்து சொல்கிறேன். வருடத்தின் முதல் 3 மாதங்கள் ஒருவித பலனும், பின்பு எஞ்சிய 9 மாதங்கள் வேறு விதமான பலன்களும் நடக்கப் போகிறது. முதலில் வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
வருடத்தின் முதல் 3 மாதங்கள் :
2024 ஆம் ஆண்டு வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் குடும்பத்துடன் சேர்ந்து குதூகளிக்கக்கூடிய மாதங்களாக இருக்கும். உங்கள் குடும்பத்தாருடன் நீங்கள் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு பேசி மகிழக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். 2023 ஆம் ஆண்டு சம்பாதித்த பணத்தைவிட 2024 ஆம் ஆண்டு பெரும் பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும், மரியாதை கூடும்.
தொழில் ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. பெரிய அளவுக்கு கடன் இருப்போர் அந்த கடன்களை அடைக்கக் கூடிய சக்தியை 2-ல் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு வழங்கப் போகிறார். சுப காரிய நிகழ்வுகளை முன் நின்று நடத்தப் போகிறீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று கூடி மனம் விட்டு பேசிய நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று ஏக்கத்துடன் இருந்த பலருக்கு வருடத்தின் இந்த முதல் 3 மாதங்கள் குடும்பத்தாருடன் அதிகப்படியான நேரங்கள் செலவிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் நேரம் :
மீன ராசிக்காரர்கள் வேலையை திறம்பட செய்யக் கூடியவர்கள். ராஜாக்கள் நாட்டை ஆண்ட காலங்களில், ராஜாவை நேரடியாக கொல்வதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், அவர் சாப்பிடும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்து அவரை கொல்வதற்கான சதியை எதிரி நாட்டு ராஜாக்கள் உருவாக்க கூடும் என்பதால், ஜோதிடர்களின் அறிவுரைப்படி மீன ராசியை சேர்ந்த ஒரு ஆணைத்தான் சமையல்காரர் ஆக போடுவார்கள், காரணம் மீன ராசியை சேர்ந்தவர்கள் சமைக்கும் சமையல், எப்பேர்ப்பட்ட விஷம் இருந்தாலும் அந்த விஷம் உடனடியாக முறிந்து விடும் என்பது தான் அப்போதைய ஜோதிடர்கள் ராஜாக்களுக்கு வழங்கும் அறிவுரையாக இருக்கும்.
ஒரு விஷத்தையே முறிக்கக் கூடிய சக்தி மீன ராசிக்கு உண்டென்றால், வாழ்க்கையில் உங்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை உங்களாலேயே தீர்க்கக்கூடிய சக்தியும் உங்களுக்கு உண்டு. தற்போது தொழில் விஷயத்திற்கு வருவோம். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பவராக இருக்கலாம் அல்லது புதிய வேலை தேடுபவராகவும் இருக்கலாம் இரண்டு வகையை சேர்ந்தவர்களுக்குமே புதியதாக தொழில் வாய்ப்பு உருவாக்கப் போகிறது. உங்களைப் போல தெளிவாக சிந்தித்து வேலை செய்யக்கூடியவர்கள் உங்கள் அலுவலகத்தில் குறைவாக இருந்தாலும் கூட உயர் அதிகாரிகளின் பார்வை உங்கள் மேலே இருக்கும்.
ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு சில நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு வாய்ப்புகள் வரலாம் காரணம் இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நேரடியாக தொழிற் ஸ்தானமான பத்தாம் வீட்டை பார்வையிடுவதால் தொழில் ரீதியான பலம் கூட போகிறது. வேலையில் புதுப்புது வாய்ப்புகள் உருவாகப் போகிறது. இந்த வாய்ப்புகள் வருடத்தின் எந்த மாதத்திலும் நடக்கலாம்.
லக்னத்தில் ராகு, ஏழில் கேது :
மீன ராசியில் ராகு அமர்ந்திருப்பதால் நீங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் உங்களை ஓய்வெடுக்க விட மாட்டார்கள், உங்களை சுற்றி இருப்பவர்கள். அப்போதுதான் உறங்கலாம் என்று சென்றிருப்பீர்கள் ஆனால் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ, உங்களின் உறக்கத்தை தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் பயணங்களால் திக்கு முக்காடி போவீர்கள். ஏழாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் ஒரு சிறிய சிக்கலை நண்பர்கள் வழியிலேயே அல்லது மனைவி அல்லது கணவன் மூலமாகவோ உருவாக்கக்கூடும்.
நீங்கள் மீன ராசி கணவராக இருந்தால் உங்கள் மனைவியின் மூலமாக ஒரு சிறு, சிறு பிரச்சனைகள் தோன்றலாம். அல்லது நீங்கள் மீன ராசி மனைவியாக இருந்தால் உங்கள் கணவன் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் உருவாக கூடும். அப்படி வரும் பட்சத்தில் அமைதியாக எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் செல்வது மிக மிக சிறப்பான அமைப்பை உங்களுக்கு உருவாக்கித் தரும். இது போன்ற சூழல்களில் பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள், நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். அப்படி நண்பர் மூலமாகவோ அல்லது மனைவியின் மூலமாகவோ வருகின்ற சிக்கல்களை ஆஞ்சநேயர் வழிபாடு மூலமாக நீங்கள் நிவர்த்தி செய்யலாம்.
பனிரெண்டாம் இடத்தில் சனி பகவான்:
மீன ராசிக்கு அஷ்டமத்து சனி ஆரம்பம் ஆகி உள்ளது. அப்படி என்றால் 12-ல் இருக்கும் சனி உங்களுக்கு சிறிய பிரச்சனைகளை கொண்டு வரலாம். தலை, மார்பு, இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் சிறு காயங்களை உண்டாக்க கூடும். கவலை வேண்டாம். இது அனைத்து மீன ராசிக்கும் நடக்கும் என்பது இல்லை, அவரவர் சொந்த ஜாதகப்படி காயங்கள் உருவாகலாம் அல்லது இதுபோன்று அடிபடும் நிகழ்வே நடக்காமல் கூட போகலாம்.
பன்னிரெண்டாம் பாவத்தில் இருக்கும் சனி பகவான் உங்கள் செலவை கட்டுக்குள் கொண்டு வருவார். கடந்த ஒன்றரை வருடங்களில் வந்த பணம் எங்கே சென்றது என்பது தெரியாமல் தவித்து இருப்பீர்கள். அந்த சூழலை சனிபகவான் மாற்றி வரவு செலவு கணக்கை சரியாக உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார்.
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை :
மீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு வந்து அமர்கிறார். வீர தீர பராக்கிரமசாலியாகவே மாறப் போகிறீர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டை நேரடியாக பார்ப்பதால் இருக்கும் இடத்தை விட்டு வெளி மாநிலம், வெளி தேசம் வெளிநாடு என்று சுற்றுலா செல்ல போகிறீர்கள். நிச்சயமாக நீண்ட தூர பிரயாணம் என்று ஒன்று இருக்கப் போகிறது. பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.
காரணம் 3-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தை பார்வையிடுவதால் எதிலும் வெற்றி எந்த செயலை எடுத்தாலும் லாபகரமாக அமையும். குறிப்பாக நீங்கள் ஒரு மடங்கு சம்பாதித்தால் உங்களுக்கு இரண்டு மடங்கு லாபங்கள் கிடைக்கப் போகிறது. வருமானத்தை தாண்டி உங்களுக்கு பல வருமானங்கள் வருவதற்கான வழி வாசலை திறக்கப் போகிறது.
மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் அடுத்தவர்கள் உங்களை மதிப்பு மரியாதை உடன் நடத்துவார்கள். ஏற்கனவே வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது நண்பர்கள் உடனான கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்று கூறி இருந்தேன் அல்லவா தற்போது மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆன காலகட்டத்தில் அந்த சிக்கல்கள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். நீங்கள் வீடு, மனை சார்ந்த ஏதேனும் விற்பனையில் ஈடுபட்டால் அது உங்களுக்கு சாதகமாக முடியும். வருடம் ஆரம்பித்து வருடம் முடியும் வரை அனைத்துமே உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கிட்டத்தட்ட உங்களுக்கு 2024 ஒரு நல்ல ராசியான வருடமாகவே இருக்கப்போகிறது.
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான எண் : 3, 5
வணங்க வேண்டிய தெய்வம் : குருபகவான், தட்சிணாமூர்த்தி