இந்தியா முழுவதும் நவராத்திரி தொடங்கியுள்ளது, இந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் துர்கா தேவிக்கு வெவ்வேறு வகையான உணவுகளை வழங்குவதன் மூலம் திருவிழாவைக் கொண்டாடும் விதம் உள்ளது.


அதுமட்டுமல்லாமல், நவராத்திரி விழா தொடங்கும் அமாவாசை அன்று முதல் பலர் தங்கள் வீட்டில் கொலு/  வைத்திருப்பார்கள். வெவ்வேறு வகையான உணவுகளை வழங்குவதன் மூலம் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். நவராத்திரி நைவேத்தியம் அல்லது பிரசாதம் என திருவிழாவின் 9 நாட்களிலும் பல்வேறு வகையான சமையல் வகைகளை சமைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள்.


முதல் நாள் வெண் பொங்கல், அரிசி - பருப்பு, பச்சைப்பயறு சுண்டல் இனிப்பு மற்றும் காரம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.


 இரண்டாம் நாள் ரவா கேசரி , புளி சாதம் , காராமணி ஸ்வீட் சுண்டல் , காரமான சுண்டல் என படையல் இடுகிறார்கள்.


சர்க்கரை பொங்கல் , மிளகு சாதம், பருப்பு வடை , கடலை சுண்டல் என மூன்றாம் நாள் இவ்வாறான உணவுப் பொருட்களை நெய்வேத்தியமாக அம்மனுக்கு படைக்கிறார்கள்


நான்காம் நாள் கோதுமை மாவு அப்பம், கடம்ப சாதம், பட்டாணி சுண்டல் என சமைக்கிறார்கள்.


ஐந்தாம் நாள்அரிசி பாயசம், தயிர் சாதம், ராஜ்மா சுண்டல் அல்லது இரட்டை பீன்ஸ் சுண்டல் செய்து வைக்கிறார்கள்.


 ரவா லடூ , தேங்காய் சாதம், பீன்ஸ் சுண்டல் அல்லது கடலை சுண்டல் என ஆறாம் நாள் களை கட்டுகிறது


ஏழாம் நாள் பச்சரிசி இட்லி , லெமன் ரைஸ் , கடலை பருப்பு சுண்டல் என அம்மனுக்கு படைக்கப்படுகிறது.


தேங்காய் பர்பி, பால் சாதம், பல தானிய சுண்டல் என எட்டாம் நாளும் விதவிதமான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது


ஒன்பதாவது   நாளான இந்த இறுதி நாளில்,அக்கரா அடிசல், ஐந்து வகை சாப்பாடுகள்  அல்லது மதிய உணவு மெனு, வடை, பிரவுன்  சுண்டல் அல்லது  தால் சுண்டல், வெற்றிலை மற்றும் கொட்டைப்பாக்கு, பழங்கள், பாறை மிட்டாய் அல்லது உலர் திராட்சை எனஎன தேவியின் அருளை பெற  எண்ணில் அடங்கா உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு  அம்மனுக்கு படையல் இடப்படுகிறது.


இந்த  ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள்,துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.


பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினம்.நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நவராத்திரியின் போது காலையில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப்படி பாராயணம் செய்ய வேண்டும்.முதல் மூன்று நாட்கள், துர்க்காஷ்டகமும், இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ்டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாடல், அழுகல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல்லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப்பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய்வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம்.


அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும். மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரக வடிவத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவாஹனம் செய்யலாம்.ஆத்மார்த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள். அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை