விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம்ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
திருக் காம கோட்ட நாச்சியாா் கோயில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது. எனினும் முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமையானவை உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுக ளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச்சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம் ஆகும்.
நாட்டில் அறம் குறையக் கூடாது என்பதற்காக இத்திருக்கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்று ஒரு கூட்டு வழிபாடு முக்யாசலேஸ்வரப் பெருமானுக்கு நடத்தப்பட்டது குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. மெளரிய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ் வாய்ந்த சமயமாகத் திகழ்ந்தது ‘ஆசீவகம்.’ இம்மதம் பற்றிய பல்வேறு தகவல்கள் பாலி மற்றும் வடமொழி நூல்களில் இருந்தாலும், இச்சமயத்தின் ஆணி வோ் தமிழகமே என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலர் தெரிவிக்கின்றனா். ஆசீவக மரபில் பிறவிப்பெருநோயைக் கடந்து வீடுபேற்றினை அடைந்த மூவரில் ‘நந்த வாச்சா’ என்பவரும் ஒருவா். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் கணிநந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவன் வாரிசுகள் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனா். அங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நந்தாசிரியன் எனும் பெயரே, பாலி மொழியில் நந்தவாச்சா என வழங்கப்பட்டுள்ளது. நந்தவாச்சா வானியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த காரணத் தினால் `கணிநந்தாசிரியன்' எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளாா். இவர் பெருமுக்கல் மலையில் முக்தி அடைந்ததாகவும், இதனால் `முக்கல் ஆசான் நல்வெள்ளையாா்” என இவா் புகழப்பட்டதாகவும் இத்திருத்தலம் குறித்த வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவன் முக்தியாலீஸ்வரா் என்று வணங்கப்படுவதாகத் தெரிவிக் கின்றனர் ஆசீவக அறிஞா்கள்.
ஆற்காடு நவாபின் பிரதிநிதியான ஐதர்அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்த காலம். அப்போது, சந்தா சாஹிபுவின் மகன் திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென, பெரு முக்கலை ஆண்ட ஐதர்அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக, புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. இங்ஙனம் ஐதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்ததால், ஆங்கிலேயரின் பகையை எதிா்கொள்ள நேரிட்டது. பெருமுக்கலின் மீது போா் தொடுக்க தக்க தருணத்தை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆங்கிலேயருக்கு அதற்கான நேரமும் வாய்த்தது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி ‘கர்னா் அயா்கூட்’ தலைமையில் பெரும்படை திரண்டபோது, (1760-ல்) பெருமுக்கலையும் தாக்கி அங்கிருந்த செல்வங்களையும் கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினார்களாம். பின்னா் 1780-ல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. 1783-ல் மீண்டும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற இக்கோட்டையை 1790-ல் திப்புசுல்தான் கைப்பற்றினாா். அடுத்த சில ஆண்டுகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் மிகுந்திருந்தபோது மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இப்படி, சோமநாதபுரம் போன்று பலமுறை தாக்குதலுக்கு உட்பட்ட இத்திருத்தலத்தில், கோட்டையின் இடிந்த மதிற் சுவரும் சிதிலமடைந்த திருக்கோயிலும் மட்டுமே எஞ்சிநின்று பல நூற்றாண்டுகால வரலாற்றுக்குச் சாட்சியாய் திகழ்கின்றன.