கடந்த 2015ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாளிதழலில் கோயில் சிலைகள் தமிழ்நாட்டில் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்தது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷக் கவுல் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு  75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய தொல்லியல் துறையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். 


இந்த வழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன?



  • தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், சிலைகள்,புராதான சின்னங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது மற்றும் கருத்துகளை வழங்குவது தொடர்பாக 17 பேர் கொண்ட பாரம்பரிய ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  • இந்த பாரம்பரிய ஆணையத்தின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயில்களிலோ, சிலையையோ, புராதான சின்னங்களிலோ  எந்தவித புணரமைத்தல் பணியை தொடங்க கூடாது. 

  • பாரம்பரிய ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள பிற புராதான சின்னங்கள், கோயில்கள் சிலைகள் ஆகியவற்றை அவற்றின் காலங்களுடன் கண்டறிந்து தமிழ்நாடு அரசிற்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் அவற்றை எப்படி பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாகவும் அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 

  • மாவட்ட அளவில் ஒரு குழுவை நியமித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் புராதான சின்னங்கள் குறித்து நிழற்படம் எடுத்து உரிய தகவல்களுடன் அவற்றை கணினியில் ஆவணம் செய்ய வேண்டும்.



 



  • தமிழ்நாட்டு இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள், சிலைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை கணினி மையமாக்கவேண்டும். அத்துடன் இந்த இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க வசதியாக சிசிடிவி வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் அந்த இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். 

  • உலக புகழ் பெற்ற மகாபலிபுரத்தில் உள்ள புராதான சின்னங்கள் மற்றும் கோயில்களை பாதுகாக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். அந்த ஆணையத்திற்கு பாரம்பரிய ஆணையம் அறிவுரை வழங்க வேண்டும்.

  • மேலும் கோயில்கள் மூலம் வரும் வருமானத்தை முதலில் கோவில் திருவிழா, புணரமைப்பு பணி மற்றும் அங்கு பணிப்புரியும் ஓதுவார்கள், அர்ச்சர்கள் ஊதியம் ஆகியவற்றிற்கு பயன்படுத்த வேண்டும். இவை போக மீதம் உள்ள பணத்தை மற்ற கோயில்களின் புணரமைக்கும் பணிகளுக்கு அளிக்கலாம். 





  • இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரும் வருமானம் மற்றும் செலவீனங்களை சரியாக தனிக்கை செய்து அதற்கான அறிக்கை விவரங்களை அரசு வைத்திருக்க வேண்டும். 


இவ்வாறு 75 அறிவிப்புகள் அடங்கி ஆணையை நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்றி 12 வாரங்களுக்குள் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மேலும் படிக்க: வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா