மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்காக இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாநில அளவிலான வல்லுநர் 2 நாட்கள் கோயிலில் ஆய்வு மேற்கொள்கிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு மீனாட்சி கோயில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீனாட்சி கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்துக்கு ஆளானது. இவ்விபத்தில் அக்குறிப்பிட்ட வசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையாகி, கலைநயமிக்க கல்தூண்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
அதனைப் புனரமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில அளவிலான வல்லுநர் குழு இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், கண்காணிப்பு தொல்லியலாளர் மூர்த்தீஸ்வரி, ஓய்வு பெற்ற தொல்லியல் துறை வல்லுநர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, அமைப்புப் பொறியியல் வல்லுநர் முத்துசாமி, சைவ ஆகம வல்லுநர் சந்திரசேகர பட்டர் என்ற ராஜா பட்டர், வைணவ ஆக வல்லுநர் கோவிந்தராஜ பட்டர் ஆகியோர் நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஸ்தபதி ஜெயராமன், திருக்கோவில் உதவிக் கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், மின் பொறியாளர் பாலமுருகன், இளநிலைப் பொறியாளர் பிரகாஷ், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் நாகவேல், முருகேஷ், லட்சுமி மாலா, மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்