மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா, முதல் நாள் லீலையாக கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது.  அதே போல் ராக்காயி அம்மன் திருக்கோவிலில்  ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 



கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர்.  உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்



முற்பிறவியில் பாவம் செய்த ஆன்மா கருங்குருவியாக பிறந்ததாகவும், பாவம் நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது என நம்பப்படுகிறது



இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி சக்தி மிக்க மந்திரத்தை உபதேசித்து அருள்பாலித்தார் என நம்பப்படுகிறது. இந்த நிகழ்வு கோவில் ஆடி வீதியில் நடைபெற்றது.



 

அதே போல் மதுரை அழகர்கோவிலில் உள்ள உப கோவிலான  அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மேலும் இன்று சுமார் ஐந்து ஆயிரம் கண்ணாடி வளையல்களை கொண்டு ராக்காயி அம்மன் மற்றும் சன்னதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.



மேலும் அழகர்கோவில் ஆடித்திருவிழா குறித்த ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் - அழகர்கோவில் ஆடித்திருவிழா படிபூஜை சிறப்பு புகைப்படங்கள் !

 

அரசு உத்தரவின்படி கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இன்று திருக்கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் தி. அனிதா அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !