'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வாக்கியம் பரவலாக சொல்லப்பட்டாலும் இன்றைய தேதிக்கு மதமும், வெறுப்பும் எப்படி பரவுகிறது? வாட்ஸ் அப் குரூப் மூலம் வீடுகளுக்குள்ளேயே வரும் கட்டுக்கதைகளும், பார்வேர்ட் மெசேஜ்களும் வெறுப்பை உருவாக்கி பல உறவுகளை முறிக்கவும் செய்கின்றன. மனு வாரியர் இயக்கத்தில், அனிஷ் திரைக்கதையில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் குருதி திரைப்படம் மதம், அரசியல் மற்றும் மனித உறவுகளை மிக அழகாக ஒரு வீட்டுக்குள்ளேயே பேசுகிறது.  படத்தில் ரோஷன் மேத்திவ், ஸ்ரீண்டா, நஸ்லான், மணிகண்டராஜன், முரளி கோபி, சாகர் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்


கேரளாவில் இப்ராஹிம் தன் தம்பி மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இப்ராஹிமின் மனைவியும், மகளும் அங்கே நடந்த நிலச்சரிவில் சிக்கி இறக்கின்றனர். அவர்களின் வீட்டின் அருகே மற்றுமொரு குடும்பம் வசிக்கிறது. அங்கு சுமதியும், அவரது அண்ணன் பிரேமனும் வசிக்கின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அதே நிலச்சரிவில் இறக்கின்றனர்.  இரு வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த குடும்பங்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே அனோன்யமான உறவு இருக்கிறது. இப்ராஹிமை திருமணம் செய்ய சுமதிக்கும் விருப்பம், ஆனால் மதம், குடும்பத்தினரின் இறப்பு என விலகிச்செல்கிறார் இப்ராஹிம். ஒரு இரவில் காவலர் ஒருவர் குற்றவாளி ஒருவருடன்  திடீரென இப்ராஹிமின் வீட்டுக்குள் நுழைகிறார். இஸ்லாமியர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி  எனவும் அவர்களை கொலை செய்ய ஒரு கும்பல் வருவதாகவும் அதனால் வீட்டில் தங்கிகொள்வதாகவும் கூறுகிறார். 




அதற்குப்பின் படம், இஸ்லாமியர் ஒருவரைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட இந்து இளைஞர், பாதுகாப்புக்காக அவர் தேடி வந்த இஸ்லாமிய குடும்பம், ஏற்கெனவே அந்நியோன்யமாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய - இந்து குடும்பம் என இவர்களுக்கு இடையே பயணிக்கிறது. மனிதர்களுக்கு  இடையே மதம், வெறுப்பு பரவுவதை மிக நேர்த்தியாக எளிமையாக த்ரில்லர் ஜார்னரில் சொல்கிறது குருதி திரைப்படம்.ஓடிடிக்கான படைப்பாகவே எடுக்கப்பட்டிருக்கும் குருதி பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நகர்கிறது. குறிப்பிட்ட கதாபாத்திரங்கள், ஒரே லொகேஷன் என்றாலும் திரைக்கதையும், ஒளிப்பதிவும் முதல் பாதியை சரசரவென நகர்த்தி செல்கிறது. குறிப்பாக என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது என்ற எந்த விவரத்தையும் நம்மால் யூகிக்க முடியாத அளவுக்கு படம் பரபரப்பாக ஓடுகிறது. இரண்டாம் பாதியில் தான் என்ன நடக்கிறது என புரிய வருகிறது. ஆனால் அதற்குப்பின் படம் கொஞ்சம் தொய்வடைவதாய் தோன்றுகிறது. 


மிகக் குறைந்த கதபாத்திரங்களே படத்தை தாங்கிச் செல்கின்றனர். அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். கதாபாத்திரத்துக்கு தேவையாக நடிப்பை மட்டுமே கொடுத்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரமாக வந்தாலும் படத்தில் அவ்வப்போதே தலை காட்டி செல்கிறார். சிறந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான திரைக்கதை, சரியாக உருவாக்கம், நடிகர்களின் சிறந்த நடிப்பு என படத்துக்கு பாசிட்டிவ் பல. இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. 




மனித உறவுகளுக்கு இடையே மதமும், வெறுப்பும் உருவாவதும், அந்த நெருப்பை அணையவிடாமல் எண்ணெய் ஊற்றும் அரசியலும், சிலரின் முன்னெடுப்பும் என படம் பேசும் விஷயம் பல பல. அமேசானில் வெளியாகியுள்ளது குருதி. 


குருதி பட ட்ரைலர்: