"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்பட்ட மதுரை 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர். அவரது 77ஆவது  வயதில் கடந்த 8ஆம் தேதியன்று சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இரவு  9:33 அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 13ஆம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் ஆதீனம் நடைமுறைப்படி முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. 



292ஆவது மதுரை ஆதீனமான அருணகிரிநாதர் காலமான நிலையில் கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம்  ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293ஆவது மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் 10 நாட்களின் முடிவாக நேற்று முனிச்சாலை பகுதியில் 292ஆவது ஆதீனம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது.



மதுரை 293 வது ஆதீனமாக நேற்று  பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஆதீன மடத்தின் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லாக்கில் அமர வைத்து சன்னியாசிகள் , தம்பிரான்கள் , ஆதீன மட பணியாளர்கள் உள்ளிட்டோர் தூக்கிச் சென்றனர். இந்த பல்லாக்கு மதுரை ஆதீனம் மடத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள சித்திரை வீதிகளில் உலாவந்து பின்னர் மதுரை ஆதீனம் மடம் வந்தடைந்தது. பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுர ஆதீனம் , கோவை காஞ்சிபுரி ஆதீனம் , என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதீனங்கள் தம்பிரான்கள் சன்னியாசிகள் பங்கேற்றனர்.



பல்லாக்கில் வந்த 293வது ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர். பல்லாக்கு ஊர்வலத்திற்கு முன்னர் கோயில் யானைகள் , ஒயிலாட்டம் , கரகாட்டம் , மேள தாளங்கள் முழங்க , நாதஸ்வர இசையில் நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.