"கோவிந்தா கோவிந்தா "வெங்கட்ரமணா கோவிந்தா" என்ற கோஷம் காற்றில் கலக்க, புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் மாதம் தானே.  வீடு வீடாகச் சென்று அரிசி தானம்‌, பணம் பெற்று, அனைத்தையும் ஒரே பொங்கலாகச்  செய்து அதைப் பெருமாளுக்கு நிவேதித்து ,பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்வது பெரும் பேறு.


மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு த் தனிச்சிறப்பு உண்டு . "பாத்ரபத" என்று சமஸ்கிருதத்தில்  குறிப்பிடப்படும் இந்த மாதத்தில், பெருமாளுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும்  சிறப்பான வழிபாடுகள் உண்டு.  "புரட்டாசி விரதம்" என்பது பண்டைய காலம் தொட்டே நம்முடைய பாரம்பரியத்தில், ஆன்மீகத்தில் ஊறிப்போன  விரதம். திருநாமம் சாற்றிக்கொண்டு மனமுருகி வழிபட்டு ,பெருமானுக்கே உரித்தான புதன் கிரகம், கன்னி ராசியில் உச்சம் பெறும் இந்த புரட்டாசி மாதத்தில், விரதங்களுக்கு மிகவும் பெருமை உண்டு.  புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் தவிர்த்து, சைவத்தில் நின்று குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது வருடம் முழுவதும் இருக்கக்கூடிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கொடுக்கும் என்பது  தொன்று தொட்ட ,நம் நம்பிக்கை.


"சங்கடம் தீர்க்கும் திருமலை வேங்கடம் என்னும் திருமலை ஆழ்வார்கள் பாடும் திருமலை "    புரட்டாசி என்றாலே திருவேங்கடமும், திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி நம் மனக்கண் முன்னே வந்து அருள் பாலிப்பார்கள் அல்லவா? . ஆயனாய்,  மாயவனான  திருமாலுக்கு விரதம் இருந்து,  பிச்சை ஏற்று அதை வாங்கி ,அந்த அரிசி மாவில் மாவிளக்கு ஏற்றும் பரம்பரைகள் இன்றளவும் உண்டு. வழக்கமாகவே விரதம் என்பது உடல் தூய்மை  மற்றும் உள்ளத் த்தூய்மைஅனைத்தையும் அருளிடும் அருமருந்து. உலகிலேயே புரக்கும் நாராயணன், திருப்பதியில் பெருமாளாக வந்து உதித்தது புரட்டாசி சனிக்கிழமையில் தான். முக்கியமாக, பாதயாத்திரையாக ஏறி பக்தர்கள் புண்ணியம் எய்துவர்.  புரட்டாசி மாதத்தில் மணி மகுடம் சூட்டுகிறார்ப்போலே,பிரம்மோற்சவம் சிறப்பாக கண்கொள்ளாக் காட்சியாகத் திருமலையில் நடந்தேறி,  பக்தர்கள் கண்களில் ஆறாய் ஆனந்தத்தைப்பெருக்க வைக்கும்.


கருட வாகனம் ,அன்ன வாகனம் ,சிம்ம வாகனம் ,கல்ப விருட்ச வாகனம், சந்திர பிரபை வாகனம், அனைத்தும் காண க்கண் கோடி வேண்டும். தொண்டைமான் ராஜா தங்கத் தாமரை மலர்களால், பெருமாளுக்கு பூஜை செய்தபோது , அவன் சமர்ப்பித்த மலர்களில் சில தங்க மலர்களுக்குப் பதிலாக மண் மலர்களாக இருப்பதைப் பார்த்தான், திடுக்கிட்டான் .  எதனால் இப்படி என்று சிந்தித்த அவனுக்குப் பெருமான் அசரீரி வாக்கு ஒலிக்கிறார்,  நடக்க முடியாத போதும் பக்தியில் சிறிதும் தளராத  பீமையாவின் பக்தியை ஸ்லாகித்தார் பெருமான். தொண்டைமான் ராஜாவும் சிலிர்த்துப் போனான். ஆசையுடன் அவரைச் சென்று கண்டு, பெருமான் தாமே உள்ளம் களித்ததை எடுத்துரைத்து ஆனந்தம் கொண்டான்.  ஏற்கனவே பீம  யாவுக்கு கொடுத்த வாக்கு போல, என்று  உன்  பக்தி பெருமையுடன் உனக்கே வெளிப்படுகிறதோ, அன்று  உமக்கு முக்தி கிடைக்கும் என்ற அருள் வாக்கின் படி,  அக்கணமே முக்தியும் கிட்டியது.


புரட்டாசி பக்தியின் மற்றொரு பெருமை இதோ :  இம்மாதத்தில் பக்தி செய்ததால்,-  பக்தன் ஒருவனுக்கு அவனுடைய ஏழரை ஆண்டு கால துன்பக் கணக்கை ,ஏழரை நாழிகை யாக மாற்றி அருளிய கருணா மூர்த்தி அல்லவோ அந்த பெருமான்!! எமனுடைய கோரைப்பற்கள் என்று சொல்லக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் மாவிளக்கு போட்டு "எங்கள் துன்பங்களைக் கடைவாய் என்ற வேங்கடவனை பிரார்த்திப்பது ஒவ்வொரு குடும்பத்தின் உன்னத பாரம்பரியம்.  பித்ருக்களுக்கு உரித்தான மகாளய லட்சத்திற்குப் பிறகு வரும் நவராத்திரி, நானிலம் போற்றும் ஒன்பது ராத்திரிகள் ஆக கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. பக்தியுடன் அந்த வேங்கடவனைத் துதிப்போம்!! புரட்டாசி விரதம் அனுஷ்டிப்போம்!!