கரூரை அரசாண்ட புகழ் சோழர் குருபூஜை-கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச்சோழரின் மெய்சிலிர்க்கும் புராணம். கரூரை அரசாண்ட சோழ அரசரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான புகழ்ச் சோழர் ஆடிக்கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரம் தினமான இன்று புகழ் சோழ நாயனாரின் குருபூஜை, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள புகழ் சோழர் மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.




சிவனை தன் சிந்தையில் வைத்து ஆட்சி புரிந்து வந்தவர், புகழ் சோழ நாயனார். அதன் காரணமாக பல வெற்றிகளையும் குவித்தவர். அவரது ஆட்சியின் கீழ், பல அரசர்கள் இருந்து, அவருக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்த கப்பங்களை வாங்கி, சைவ நெறி தழைத்து ஓங்க திருப்பணிகளைச் செய்து வந்தார். புகழ்ச்சோழ நாயனார், தன் அமைச்சர்களிடம் ஒரு முறை, “நமது அரசாட்சிக்கு அடங்காது, மாறுபட்ட அரசர்கள் இருப்பார்களானால், அவர்களைப் பற்றி கூறுங்கள்” என்று கேட்டார். அமைச்சர் ஒருவர், “அரசே! கப்பம் செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அதிகன். மலைகளை மதில்களாக சூழ்ந்த நகரில் காவல் மிக்கவனாக அரசு புரிந்து வருகிறான்” என்று கூறினார். இதையடுத்து புகழ்ச்சோழ நாயனார், “நால்வகை படைகளுடன் சென்று அதிகனை சிறைபிடித்து வாருங்கள்” என்றார்.


மன்னனின் கட்டளையை ஏற்று நால்வகை படைகளும், அதிகன் ஆட்சி செய்து வந்த நகரை நோக்கி விரைந்தன. இருதரப்புக்கும் கடும் போர் நடந்தது. எங்கும் ரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இறுதியில் அதிகனுடைய சேனைகள் உறுதியிழந்து மாண்டன. அவனுடைய மலை அரண்கள் தகர்க்கப்பட்டன. போரில் மாண்ட எதிர்சேனை வீரர்களின் தலைகளை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டு, புகழ்ச்சோழ நாயனாரின் முன்பாக கொண்டு வந்து குவித்தனர், தளபதிகள். மகிழ்ந்து போனான் மன்னன். தன்னுடைய அரச சேனையின் திறமையைக் கண்டு மெய்சிலிர்த்தான். தன் முன் குவிக்கப்பட்டிருந்த தலைகளை பார்த்தான்.




அப்போது அந்த குவியல்களுக்கு மத்தியில் சடைமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்டு, புகழ்ச்சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. “ஐயோ.. என் வாழ்வில் நான் செய்த அனைத்து பலன்களையும் இழந்து விட்டேனே. செய்யக் கூடாத செயலை செய்து பெரும் பாவத்தை சுமந்து கொண்டேனே. சடைமுடியை கொண்ட சிவனடியாரின் தலையைக் கண்டும் என் இதயம் இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே. இனி எனக்கு இந்த உலகில் வாழ தகுதியில்லை” என்று கதறி அழுதான். அமைச்சர்களை நோக்கி, “இந்த அரசாட்சியை அறநெறி தவறாது ஆண்டு, உரிய காலத்தில் என் புதல்வனிடம் ஒப்படைப்பீர்களாக!” என்று கட்டளையிட்டான்.


பின் விறகுகளை இட்டு, பெருந்தீ வளர்த்தான். அவனது செயலைக் கண்டு அமைச்சர்கள் மனம் கலங்கிப் போனார்கள். அவர்களிடம், “அமைச்சர்களே! மனம் கலங்க வேண்டாம். இனி எனக்கு இவ்வுலகில் வாழ்வு இல்லை. கடமையை நீங்கள் தவறாது செய்யுங்கள்” என்று கூறினார் புகழ்ச்சோழ நாயனார்.




பின்னர் சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் குதிப்பது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். வானில் இருந்து மலர் மழை பெய்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச்சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலை சேர்ந்து முக்தி அடைந்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நுழைவாயிலுள்ள தூணில் புகழ் சோழர் மன்னர் திருவுருவத்திற்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதைத்தொடர்ந்து புகழ் சோழருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற புகழ் சோழர் சிறப்பு அபிஷேகத்திற்காக ஏராளமான பக்தர்கள் ஆலய வழிபாடு தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண