கரூர் மாவட்டம், வெங்கமேடு குளத்துப்பாளையத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கற்பக விநாயகர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஸ்ரீருக்மணி அம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




பின்னர் ஆலயத்தின் மூலவர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் உற்சவர் மற்றும் மூலவர் ஸ்வாமிகளுக்கு பஞ்சாமிர்தம், தேன், நெய்,  பால், தயிர்,  இளநீர்,  எலுமிச்சைச் சாறு,  அபிஷேக பொடி,  திருமஞ்சள்,  மஞ்சள்,  சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து புனித தீர்த்தத்தால் மகா அபிஷேகம் நடைபெற்றது.


*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


பின்னர் ஆலயத்தின் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, அதன் தொடர்ச்சியாக மூலவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் உற்சவர் ருக்மணி தாயார் மற்றும் பண்டரிநாதன் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வகையான ஆபரணங்களால் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் பண்டரிநாதன் ஆலயத்தின் பட்டாச்சாரியார் அனைத்து தெய்வங்களுக்கும் பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.




அதைத்தொடர்ந்து, துளசி மற்றும் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை மற்றும் ஏகாதேசி விழாவை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம், மேட்டு தெருவில் உள்ள  ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயம், சேங்கல் மலை ஸ்ரீ  பெருமாள் ஆலயம், கரூர் நகர பகுதியில் உள்ள ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் இன்று அதிகாலை சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பின்னர் சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு , நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி மகாதீபாராதனை நடைபெற்றது.



ஊரடங்கு சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு அரசு மீண்டும் ஆலயங்களை வெள்ளி, சனி ,ஞாயிறு உள்ளிட்ட மூன்று நாட்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிறப்பு பூஜையின் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சார்பாக செய்திருந்தனர். மாவட்டத்தில் ஒரு சில ஆலயங்களில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.