காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து பக்தி பரவசத்துடன் வேண்டுதல் நிறைவேற்றினர் . 

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை இன்றும் நம் கண் முன் கொண்டு வரும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் இன்று (13.07.2022) காரைக்காலில் நடைபெற்றது.

 



         

முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித் திருவிழா கடந்த 11-ம் தேதி இரவு அனுக்ஜை விக்னேஸ்வர பூஜை, மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று (12.07.2022) பரமதத்தருக்கும் புனிதவதி என்றழைக்கப்படும் காரைக்காலம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சி இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பரமசிவன் பிச்சாண்டமூர்த்தியாக எழுந்தருளி பவழக்கால் விமானத்தில் பத்மாசனமர்ந்து வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க வீதியுலா நிகழச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வதற்காக வீடுகளிலிருந்தும் வீட்டு மாடிகளிலிருந்தும் மாம்பழங்களை வீசி எறிவதும் அம்மாம்பழங்களை கீழே நிற்கும் பக்தர்கள் தாவித்தாவிப் பிடிப்பதும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

 



 

பக்தர்கள் வீசியெறியும் மாம்பழங்களை பிடித்து உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து அமுது படையல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து 17.07.2022 அன்று அதிகாலை காரைக்காலம்மையார் எலும்புறுகொண்டு கைலாயமலையேறும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.  மாங்கனித்திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் வந்து குவிந்துள்ளனர். பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் காரைக்கால் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது. 

 



 

கணவர் பரமதத்தர் வீட்டிற்கு அனுப்பிய 2 மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு அமுதிட்டு பின்னர் இறைவன் சிவபெருமானிடம் வேண்டி அதிமதுர மாங்கனியை காரைக்கால் அம்மையார் பெற்றதாக ஐதீகம். இவ்வரலாற்று சம்பவத்தை நினைவுகூறும் விதமாகத்தான் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனித்திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.