தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் சங்கரன்கோவில் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது கழுகுமலை.  இம்மலையின் கிழக்குச்சரிவில் இறந்துபோன  சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.  


சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் 100க்கும் மேற்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் இங்கு உள்ளன. இவை கி.பி.768 முதல் கி.பி.815 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை ஆகும்.




திருக்கோட்டாறு, திருநறுங்கொண்டை, பெரும்பற்றூர், திருச்சாணத்துமலை,  குறண்டி, கடைக்காட்டூர், பேரெயிற்குடி, நெடுமரம், மிழலூர், வெண்பைக்குடி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணர்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். எட்டி, ஏனாதி, காவிதி முதலிய பட்டங்கள் பெற்றவர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். தச்சர், வேளான், குயவர், கொல்லர் முதலிய தொழில்கள் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர்.




சிற்பங்கள் இங்கு மூன்று வகையாகக் காணப்படுகின்றன. முதல் வகையில், தீர்த்தங்கரர்கள் எளிய வேலைப்பாடுகளுடன் தாமரைப் பீடங்களில் முக்குடையின் கீழ் அமர்ந்துள்ளனர். இவை இரண்டு வரிசைகளில் உள்ளன. இதே அமைப்பில் சற்று பெரிய உருவங்களுடன் தீர்த்தங்கரர் ஒருவர் அல்லது இருவராகச் சேர்ந்துள்ளது 2-வது வகை. மூன்றாவது வகையில் மகாவீரர், பார்சுவநாதர், அம்பிகா, பாகுபலி, பத்மாவதி போன்றோர் சிற்பங்கள் தனித்த அடையாளங்களுடனும், கலை நுணுக்கம், அழகிய வேலைப்பாடுகளுடனும் செதுக்கப்பட்டுள்ளன.


இங்குள்ள சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. அசோகமரத்தின் கீழ் நின்ற நிலையில் தலையில் மகுடம், காதுகளில் தோடு அணிந்து திரிபங்க நிலையில் ஒய்யாரமாக காட்சி தருகிறார்  நேமிநாதரின் இயக்கியான அம்பிகா. இவரது வாகனம் சிங்கம் கம்பீரமாக இவர் அருகில் தலையை நிமிர்த்தி நிற்கிறது. தனிக்கோட்டத்தில் தாமரை மலர் மேல் அமர்ந்த நிலையில் இருக்கிறார் பத்மாவதி இயக்கி. இவர் தலை மேல் ஐந்துதலைப் பாம்பின் படம் கவிழ்ந்திருக்கிறது. இவர் 23ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதரின்  இயக்கி ஆவார். இவருக்குக் கீழே கி.பி.13-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது.




சமணச் சின்னங்களுக்கு அருகில் உள்ள கருப்பசாமி சன்னதியின் பின்பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் காற்றோட்டமுள்ள ஒரு குகை இருக்கிறது. இதன் உள்ளேயும் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. சமணர் தெய்வத்துக்கு அரைமலை ஆழ்வார் என்றும் மலைமேல் திருமலைத் தேவர் என்றும் பெயர் இருந்திருக்கிறது.


 கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் உள்ளன. வட்டெழுத்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் ஒவ்வொரு எழுத்தாக படித்து எழுதிப் பார்த்துப் பழக இயற்கை எழிலுடன் கூடிய அமைதியான சூழல் இங்கு நிலவுகிறது. தீர்த்தங்கரர்களின் வேறுபாடுகளை இங்குள்ள சிற்பங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம். மொத்தத்தில் சமணம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அருமையான வரலாற்றுப் பொக்கிஷமாக கழுகுமலை விளங்குகிறது