கோயில் சொத்துக்களை இணையளதளத்தில் பதிவேற்ற உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இது சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை என புகழாரம் சூட்டியுள்ளார். மக்களின் வேண்டுகளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள் எனவும், வெளிப்படைத்தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி என கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர் பாபுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தின் மூலம் அறநிலையத் துறையின் வரவு, செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து, அதை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சத்குரு வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணையப்பதிவேற்றம் குறித்து கடந்த 18ஆம் தேதி இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முழுதும் உள்ள கோயில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். 




அமைச்சர் சேகர்பாபு பிறப்பித்த உத்தரவுகள்:-


1. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழாக்கள் போன்ற தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்


2.  கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை, 'ஸ்கேன்' செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


3.கோயில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் எளிதாக காணும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


4. அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமை ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்


5. கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயினங்களை பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும். அமைச்சரின் இந்த உத்தரவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.