உங்கள் ஜாகத்தில் ராகு அமர்ந்துள்ள இடம் சரியில்லை என்றால் என்னவாகும் என்பது தெரியுமா? 


ராகுவும், கேதுவும் நிழல் கோள்கள் எனப்படுகின்றன. அவை நல்ல இடத்தில் இருந்திருந்தால் தைரியுமும், புகழும் கூடும். அதே நேரத்தில் அவற்றின் கிரகாச்சாரம் சரியில்லை என்றால் தீயவை தேடி வரும். பொருளாதாரத்துக்கும் சமூக அந்தஸ்துக்கும் பங்கம் வரும். குடும்பத்தில் குழப்பம், வாக்குவாதம், உணர்ச்சிவசப்படும் அளவுக்கு விவாதங்கள் நடக்கும். 
குறிப்பாக, ராகு சரியான இடத்தில் அமராவிட்டால் ஜாதகாரருக்கு சிக்கல் மேல் சிக்கல் தான். ராகுவால் ஏற்படும் குழப்பத்தால், அடுத்தவர் தீங்கு செய்ய வேண்டாம். அவரே அவருக்கு கேடு விளைவித்துக் கொள்வார்.


மனதில் ஏற்பட்ட குழப்பத்தால், அவர் சரியானவற்றை தேர்வு செய்வதை விடுத்து தவறானதைத் தேர்வு செய்து கொள்வார். நாளையைப் பற்றிய கவலையால் அழுவதும் நினைத்துப் புலம்புவதும் அந்த நபரின் இயல்பாகிவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படுவார். எப்போதும் பதற்றத்தில் இருப்பார். முடிவுகள் எடுப்பதில் குழம்புவார். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்.


ராகு பலன்கள்:
ராகுவுக்கு சொந்த வீடு இல்லை. இந்தக் காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும்.  


ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையும் இருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும்.புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.


அதுவே ராகு பலமில்லாத கட்டத்தில் அமர்ந்திருந்தால், உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு  உண்டாகும். 


எதற்கெடுத்தாலும் அதிக முன் கோபமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு  தோஷம் பிடிக்கும். செய்த தவறுக்கு அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும். உடல்  நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக  மாறக் கூடிய நிலை ஏற்படும்.


பரிகாரம் என்ன?


ஒருவர் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான எளிய பரிகாரம் தான, தர்மம் தான். முடிந்தால் தேயிலை, தூபக் குச்சிகள், கருப்பு - வெள்ளை போர்வைகள் மற்றும் சீயக்காய் தானமாக வழங்கலாம். இல்லையெனில் வறியவருக்குத் தேநீர் வாங்கி தரலாம். போர்வைகள் வாங்கி தரலாம்.