தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


என்று தொடங்கும் போதே... தெரிகிறது... தென்னாட்டில் சிவன் சிறப்பித்திருந்ததை. இங்கு சிவ தலங்களுக்கு பஞ்சமில்லை. எங்கும் சிவம்... எதிலும் சிவமாய் வீற்றிருக்கும் ஈசன், வெள்ளிமலையில் கயிலாசமாய் காட்சியளிக்கிறார் என அறிந்து, புறப்பட்டோம்.






வெள்ளி மலை மீதுள்ள புற்று கோயில்


 


திண்டுக்கல்லில் இருந்து 1 மணி நேர பயணம். பயணம் அல்ல அத... ரம்யமான அனுபவம். சிறுமலை அடிவாரம் வந்ததுமே எதிரில் நிற்பவர் கூட தெரியாத அளவிற்கு பனி சூழ் உலகு. காரின் மின் விளக்குகள் இல்லாமல், பட்டப்பகலிலும் நகர முடியாது. அந்த அளவிற்கு பனி மூட்டத்தில் பயணிக்கும் குளுகுளு வாய்ப்பு. சிறுமலை அடைந்ததும், அங்கிருந்து அகஸ்தியர் புரம்... அழகான சாலை... சுற்றிலும் சோலை... மதிய வேளை... ஆனாலும் வெயில் இல்லா குளிர் மாலை சூடிய உணர்வோடு, நகரும் வாய்ப்பு. அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இனி நடக்க வேண்டும். நடப்பது என்றால், சாலையில் அல்ல. புதர் சூழ்ந்த மலைப்பாதையில். 


 



வழியெங்கும் கரடுமுரடான பாதை


வழியாக கட்டமைக்கப்பட்டாலும், அது கரடுமுரடான பாதை தான். ‛ஏத்தி விடப்பா... தூக்கி விடப்பா...’ என சபரிமலை செல்லும் போது பாடுவோம். இங்கு, ஏற்றிவிடவும் முடியாது, தூக்கி விடவும் முடியாது. அவரவர் கடந்து செல்வதே பெரும்பாடு. அந்த அளவிற்கு மலை மீதுள்ள வெள்ளி மலையான் கோயிலுக்குச் செல்வது சிரமமான ஒன்று. 


‛ஒரு காலத்தில் தங்கமாக இருந்த மலையை பாதுகாக்க, வெள்ளியாக மாற்றியதாகவும்... வெள்ளியாக மாற்றிய பிறகும், கரைந்து கொண்டே இருந்ததால், கல்லாக மாற்றியதாக’ அப்பகுதியினர் அந்த மலைக்கான பெயர் காரணத்தை கூறுகின்றனர். அகஸ்தியருக்கு அருள்பாலித்த சிவனுக்கு, அவரே பிரதிஸ்டை செய்த லிங்கம் தான் வெள்ளிமலையார் கோயில் என்கிறது ஐதீகம். 


 



கோயிலுக்கும் செல்லும் பாதை


பெயருக்கு ஏற்றார் போல், பனி சூழ் மலையில், உறை குளிரில் வீற்றிருக்கும் வெள்ளி மலை ஆண்டவரை தரிசிப்பதே பிரமிப்பான அனுபவம். வயதானவர்கள் மேலே செல்வது சிரமம். இளைஞராக இருந்தாலும், இளைப்பாறாமல் மேலே ஏற முடியாது. தவறினால், பாதாளம். மிக மிக கவனமாக கடந்து சென்றால், தான் வெள்ளி மலையானை தரிசிக்க முடியும். ஒரு மணி நேர மலையேற்றத்தை கடந்ததும், அமைதியான சூழலில் நெல்லி மரத்தடியில் வீற்றிருக்கும் அய்யனின் நிழலில் இளைப்பாறி, இறைவழிபாடு நடத்தும் போது, ஏறி வந்த சோகை எல்லாம் பறந்து போகும். 


 



மலைமீது சூழ்ந்துள்ள பனி


கையில் குடிநீரும், ஒரு துண்டும் எடுத்துச் செல்வது பயணத்திற்கு உதவும். மேலே எதுவும் கிடைக்காது, இருக்காது. நாம் கொண்டு செல்வதை மட்டுமே பயன்படுத்த முடியும். கோயில் பூசாரியால் சிறுமலை வாழையாய் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், கோயில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கைலாயம் எப்படி இருக்கும் என நமக்கு தெரியாது. ஆனால், அதை அறிய வேண்டுமானால், வெள்ளிமலை ஏறினால் காண முடிகிறது. இது முழுக்க முழுக்க ஆன்மிக பயணம். கால் கடுக்க கடந்து சென்று உள்ளம் உருக வேண்டுவோருக்கு உகந்த பயணம். 


 



வெள்ளி மலை ஆண்டவர்


வேண்டியது கிடைக்கிறது, கேட்பது நடக்கிறது என்கிறார்கள் அங்கு வந்த பக்தர்கள். அனுபவம் சார்ந்த ஆன்மிக பயணம் என்றாலும், அதை கடந்து மலையேற்றம் மாதிரியான த்ரில்லிங் பயணமாகவும் அது இருக்கிறது. திண்டுக்கல் செல்ல பஸ்,ரயில் இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை அகஸ்தியர் புரம் செல்ல நேரத்தின் அடிப்படையில் பஸ்ஸூம் இருக்கிறது. கார், பைக் என்றால் இன்னும் வசதி. வாய்ப்பிருந்தால் நீங்களும் சென்று வரலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண