விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள  தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில் வேத  மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


பழமையான விநாயகர் கோயில்:


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த 18-ம்தேதி காலை விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.


மகா கும்பாபிஷேகம்:


அதனைத் தொடர்ந்து மஹாபூர்ணாஹீதி நடந்தது. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று. இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திண்டிவனம் சரக போலீசார் 50க்கும் மேற்பட்டார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, தர்மபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


பொய்யாமொழி விநாயகர்  : 


மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றிலிருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் "பொய்யாமொழி விநாயகர்' என அழைக்கப்பட்டார்.


லிங்கத்தில் விநாயகர்


இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம்.


விழுதில்லாத ஆலமரம்


விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.