திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள்வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத் தெரியவந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலைநாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதைபொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்ப்பிக்கிறது .





சேரன்மகாதேவி ஊர் வரலாறு :

 

சேரன்மகாதேவி (சேர்மாதேவி,சேரன்மாதேவி, பேருந்து வழக்கில் சேரை) ஒரு சிறிய தனிச் சிறப்புகள் ஏதுமற்ற சாதாரண ஊர் மாதிரிதான் இருக்கிறது.

 

நவ கைலாயம் என்றழைக்கப்படும் 9 தாமிரபரணிக்கரை சிவாலயங்களில் இரண்டாவது ஆலயம் இங்கே இருக்கிறது. அம்மை நாதர் என்றழைக்கப்படும் சுவாமியும், ஆவுடையம்மன் என்ற அம்மனும் கொலுவிருக்குமிடம், கோமதியம்மன் என்றும் சொல்கிறார்கள். இந்த நவ கைலாயங்கள் உருவான கதையும்,ஊருக்குள் செல்லும்,கனடியன் கால்வாய் உருவான கதையும் ஒன்றுக்கொன்று ஒரே கதை போலவும் இருக்கிறது.. ஊர் பரபரப்புகளுக்குக் கொஞ்சம் தள்ளி தாமிரபரணி ஆறும், சேரன் மகாதேவியில் ஓடுகிறது. அதன் கரையில் தான் இந்த அம்மை நாதர் ஆலயம் அமைந்திருக்கிறது.





 

சிறிய ஆலயம்தான் ஆனால் அழகு மிக்கது. உள்ளூர்க்காரர்கள்,வேகமாக அம்மை நாதர் என்று சொல்கையில்,சற்று விபரீதமாக காதில் ஒலிக்கிறது. ஒரு வேளை ஏதாவது திகம்பரர்கள் சம்பந்தப்பட்டதோ என்று கூட நினைப்பது உண்டு . இங்கே உள்ள பைரவர் அவருடைய வாகனமான நாய் இல்லாமல் தனியாக இருக்கிறார். காசியில் உள்ளது போல என்றார்கள். அம்மன் சந்நிதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் போலவே வலது புறத்தில் இருக்கிறது. பொதுவாக, சந்நிதியில் உள்ள தெய்வம் குறித்தும், கோவில் குறித்தும், பெருமாள் கோவில் அர்ச்சகர்கள்தான் சேவை சாற்றும் போது விளக்குவார்கள். இங்கே இந்த சிவன் கோவிலில் உள்ள அர்ச்சகர், கோவிலின் சிறப்புகளை அழகாக எடுத்துச்சொல்கிறார். இங்கேயும், நந்தனார் வந்து வழிபட்டதாக இருக்கிறது.. அவர் வெளியில் இருந்து தரிசனம் செய்வதற்காக, சுவாமி சந்நிதியின் நந்தி சற்று விலகிக் காட்சியளிக்கிறது. ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக வயல்வெளிகளும், சிறு ஓடைகளும், வடக்குப் பக்கம் தாமிரபரணியும் இருக்க ஒரு ஏகாந்தமான சூழல் நிலவுகிறது.



 

ஆனால், அதனாலேயே வருவோர் போவோரும் குறைவு. 6 மணிக்கே கோவில் மூடப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். சேரன் மகாதேவியின் இன்னொரு சிறப்பு. இங்கே உள்ள ஒரு ரயில்வே கேட். இந்த கேட்டின் முன் ரயில் போவதற்காக, காத்திருந்தபோதுதான், பெருந்தலைவர், காமராஜர், அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஏன் பள்ளிக்கூடத்துக்கு போகவில்லை என்று கேட்டதும், ”அங்க போனால், யார் சோறு போடுவார்கள்” என்று அவன் கேட்டதும், “சோறு போட்டா ஸ்கூலுக்குப் போவாயா என்றவர் கேட்க அவன் ஆம் என்று தலையாட்ட, அப்போது காமராஜரின் மனதில் பிறந்ததுதான், தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றையே புரட்டிப் போட்ட மதிய உணவு திட்டம்” என்று சொல்கிறார்கள். இத்தனை பெருமை வாய்ந்தது இந்த சேரன்மகாதேவி




மிளகு பிள்ளையார் கோவில் :


சேரன்மகாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் திருக்கோவில். கன்னடியன் கால்வாயின் கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் உள்ள விநாயகரின் உடலில் மிளகை அரைத்து தேய்த்து, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அந்த புனித தண்ணீரை கால்வாய்க்குள் விழும்படி செய்தால், மழை பொழிந்து தண்ணீர் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே மழை பொய்த்து போகும் காலத்தில் இந்த விநாயகருக்கு மிளகு அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.




1916-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அளவில் மிகச்சிறிய வடிவாக காட்சிதரும், இந்த மிளகு பிள்ளையார் திருக்கோவிலில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது இப்பகுதி பக்தர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.