சொந்த வீடு  வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது அனைவரின் கனவாகவும் இருக்கும்.  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு காணி நிலமாவது இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் பெரியவர்கள். இப்படி சொந்த வீடு இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில்  ஒரு மிகப்பெரிய கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.  


திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றால் மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு உள்ளதா? இல்லையா? என்று தான் முதலில் கேட்கிறார்கள்.  சொந்த வீடு இல்லாத  மாப்பிள்ளைகளுக்கு  பெண் தர பெற்றோர்களே மறுக்கிறார்கள். சரி ஜாதகர் ரீதியாக இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சொந்த வீடு யாருக்கு அமையும்,  எப்போது அமையும் என்று பார்க்கலாம். 


வீடு கட்டும் யோகம் யாருக்கு  உண்டு ?


ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் பாவகத்தில் சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டு.  உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு நான்காம் பாவாதிபதியான சந்திரன் நான்காம் பாவகத்திலேயே அமர்ந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு சொந்த வீடு உண்டு.  அது தாயாரின் மேற்பார்வையில் தாயாருக்காக தாயாரின் பெயரை வைத்து அந்த வீடு அமைந்திருக்கும். இதேபோன்று 12 லக்னங்களுக்கும் எடுத்துப் பார்த்தால் லக்னத்தில் இருந்து நான்காம் பாவத்தில் எந்த கிரகம் அமர்ந்திருக்கிறது அந்த கிரகத்தின் காரகத்துவத்தில் வீடு, தெரு, திசை போன்றவை அமையும்.  


நான்காம் பாவத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு பூர்வீக வீடே கைக்கு வந்து சேரும்.  ஏற்கனவே பெற்றோர்கள் கட்டி வைத்த வீடு அவர்கள் கையில் வந்து சேரும். எந்த ஒரு கஷ்டப்படாமலேயே பெற்றோர்கள் கட்டிய வீட்டில்  பிள்ளைகள் சொந்தம் கொண்டாடுவது நான்காம் பாவத்தில் அமர்ந்த கிரகத்தால் நான்காம் பாவாதிபதி இருக்கும் வலுவினால். உதாரணத்திற்கு சிம்ம லக்னத்திற்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தால் பூர்வீக சொத்து அவர்கள் கையில் வரும் பெற்றோர்கள் கட்டிய வீடு பிள்ளைகள் பெயரில் மாறி அந்த ஜாதகர் அந்த வீட்டை அனுபவிப்பார்.  


தனுசு லக்னமாக இருந்து நான்காம் வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்தால் காம்ப்ளக்ஸ் போன்ற வீடுகளை கட்டி அதை வாடகைக்கு விடவும் வாய்ப்புண்டு.  மகர லக்னத்திற்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தால்  அவர்களுக்கும் வீடு மனை போன்ற யோகங்கள் மிகச் சிறப்பாகவே அமையும். குறிப்பாக மலைச்சார்ந்த இடங்களில் வீடுடன் கூடிய தோட்டத்தில் அவர்கள் வசிப்பவர்களாக இருப்பார்கள்.  விவசாய நிலங்களில் அவர்கள் செழிப்பான  விவசாயத்தைப் பார்க்கும் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள்.  


கன்னி லக்னத்திற்கு நான்காம் பாவ அதிபதி குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வரும் மனைவியின் மூலமாக இவர்களுக்கு சொத்து வீடு போன்றவை கிடைக்கும். குறிப்பாக மனைவி சொந்த வீட்டுடன் வந்து கணவன் பெயருக்கு மாற்றி அது அவர்களுக்கு சொந்தமாக  மாறிவிடும். வீடு கட்ட வேண்டும் என்றால் நான்காம் வீட்டில் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சூரியன் செவ்வாய் போன்ற வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பின் நிச்சயமாக அவர்கள் இடம் வாங்கி வீடு கட்டுவார்கள். லக்னத்திற்கு நான்காம் அதிபதி இரண்டாம் பாவத்தில் அமர்ந்திருந்தால் சுயமாக தன் சம்பாத்தியத்தில் வீடு கட்டும் யோகம் அவர்களுக்கு உண்டு.  லக்னத்திற்கு நான்காம் அதிபதி  5, 9, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் அவர்கள் தகப்பனாரின் சொத்தில்  அவர்களுக்கான சொந்த வீட்டைக் கட்டிக் கொள்வார்கள். 


ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குபவர் யார் ? 


லக்னத்திற்கு நான்காம் பாவம் வலிமையாகி சனி பகவானின் தொடர்பு பெற்றால் ஏற்கனவே நன்றாக கட்டியிருக்கும் வீட்டை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார்கள்.  உதாரணத்திற்கு சிம்ம லக்கனம் லக்னத்திற்கு நான்காம் அதிபதி செவ்வாய் ஐந்திலோ அல்லது லக்கினத்திலோ 11  வீட்டிலோ  அமர்ந்திருக்க, நான்காம் வீட்டில் ஏழாம் அதிபதியான சனி பகவான்  அமர்ந்திருக்க நிச்சயமாக ஏற்கனவே கட்டிய வீட்டில் அவர்கள் சொந்தமாக குடி போவார்கள்.


நான்காம் வீட்டுக்கு அதிபதி தனியாக இருந்து அதனுடன் சுக்கிரன் தொடர்பு பெற்றால் நிச்சயமாக அந்த வீடு மாட மாளிகை கூட கோபுரம் போன்று காட்சியளிக்கும்.  ஏற்கனவே கட்டிய பிரம்மாண்டமான வீட்டை வாங்குவதற்கு சுக்கிரனும் சனியும் துணை புரிய வேண்டும் லக்னத்திற்கு நான்காம் வீட்டுடன் சனியும் சுக்கிரனும் தொடர்பு பெற்றால் ஏற்கனவே கட்டிய மூன்றடுக்கு மாடி தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.  நான்காம் வீட்டுடன் சுக்கிரன் தொடர்பு கொள்ளும் பொழுது ஆடம்பரமான வீடு  கட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். அதே சமயத்தில் ஏற்கனவே கட்டிய வீட்டை குடி போக வேண்டும் என்றால் சில சில மாற்றங்கள் செய்து இடித்து அவர்களுக்கு இஷ்டம் போல் அதை வடிவமைத்து மீண்டும் அதில் குடி போவார்கள்.  நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டின் அதிபதியுடன் சனி தொடர்பு பெற்றால் ஏற்கனவே இருந்த வீட்டை வாங்கி சீரமைத்து  அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. 


சொந்த வீடு வாங்க  காலம் எப்பொழுது ?


 ஒருவருக்கு சொந்த வீடு வாங்கும் காலத்தை தெரிந்து கொள்ள  ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் அமர்ந்திருக்கக் கூடிய திசையோ அல்லது நான்காம் பாவாதிபதியின் தசையோ புத்தையோ நடந்தால் நிச்சயமாக அவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகம் உருவாகும்.  உதாரணத்திற்கு  மிதுன லக்னம் நான்காம் வீட்டு அதிபதி புதன் தனது தசை நடத்தும் பொழுது அந்த 19 வருடத்திலேயே, அவர்கள் சொந்தமாக வீடு கட்டி குடி போவார்கள்.  நான்காம் அதிபதி தசையோ புத்தியோ நடத்தும் பொழுது மற்ற சுப கிரகங்கள் கோச்சாரத்தில் உதவி செய்யும் பட்சத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடி போவார்கள்.  நான்காம் வீட்டில் அமர்ந்த கிரகமோ நான்காம் வீட்டை பார்த்த கிரகமும் நான்காம் வீட்டின் அதிபதியின் தசையோ புத்தியோ வராமல் நிச்சயமாக ஒருவரால் வீடு சம்பந்தப்பட்ட எந்த காரியத்திலும் ஈடுபட முடியாது. 


“ வீடு யோகம் அமைய வணங்க வேண்டிய தெய்வம் “ :


 ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் அதிபதியின் தெய்வத்தை வணங்க வேண்டும் உதாரணத்திற்கு சிம்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி செவ்வாய் ஆகில் முருகப்பெருமானை வணங்கி வர வீடியோகம் நிச்சயமாக அமையும்.  ரிஷப லக்னத்திற்கு நான்காம் அதிபதியான  சூரியனின் அதிபதியான சிவனை வணங்கி வர ரிஷப லக்னக்காரர்களுக்கு வீடு யோகம் அதிவிரைவில் கூடிவரும்.  இதேபோன்று ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் நான்காம் வீட்டின் அதிபதியை அறிந்து கொண்டு அவர்களின் அதி தேவதையை வணங்கி வந்தால் நிச்சயமாக வீடு யோகம் அமையும்.