இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றை உள்வாங்கிய சமயமே இந்து சமயம்.
தை மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கனடா அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணம், நவராத்திரி, தீபாவளி என இந்துக்களின் பண்டிகைகள் அணிவகுக்கும் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகிலேயே மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்தான். உலகில் நூறு கோடிக்கும் மேலான இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பேர் உள்ளனர். இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள், மதிப்புகள் போன்றவை வாழ்க்கையின் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்குகின்றன. அமெரிக்காவில் உள்ள துடிப்பான இந்து சமூகம், வடக்கு கரோலினா மாகாண குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி பெரும் பங்களிப்பு ஆற்றி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்து மதத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாட உள்ளோம். இந்த அறிவிப்பின் மூலம் நடப்பு அக்டோபர் மாதத்தை, வடக்கு கரோலினாவில் ‘இந்து பாரம்பரிய மாதமாக' அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆளுநர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டெக்சாஸ் நியூ ஜெர்சி ஜார்ஜியா புளோரிடா மிச்சிகன் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "யோகாவில் இருந்து உணவு வரை பண்டிகைகளில் இருந்து தொண்டு வரை நடனம் இசை அஹிம்சை தத்துவங்கள் என அமெரிக்கர்களின் வாழ்வில் ஹிந்து கலாசாரம் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.எனவே ஹிந்துக்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ. 4ல் கொண்டாடப்படுவதால் இந்த பாரம்பரிய மாத கொண்டாட்டத்தை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது."