Aadi Perukku 2024: ஆடி மாதம் வந்தாலே கோயில்கள் களைகட்டி காணப்படும். மாதம் முழுவதும் ஆன்மீக மணம் கொண்ட மாதமாக திகழ்வது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஆடிப்பெருக்கும் ஒன்றாகும். நடப்பாண்டிற்கான ஆடிப்பெருக்கு நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு தற்போது முதலே களைகட்டி வருகிறது.


ஆடி 18 ஏன் சிறப்பு?


ஆடி மாதம் என்பது விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடங்கும் மாதம் ஆகும். தமிழ்நாட்டின் பிரதான விவசாயத்திற்கு மூலாதாரமாக காவிரி உள்ளது. மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து பொங்கி ஓடும் காவிரி ஆறு காவிரி கடைமடை வரை சென்றடைவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.


இதன்காரணமாக ஆடி மாதம் 18ம் தேதி காவிரித் தாயை வணங்கி அன்றைய நாளில் புனித நீராடி, பூஜை செய்வது வழக்கம்.  இந்த நாளே ஆடிப்பெருக்காகவும் கொண்டாடப்படுகிறது. தற்போதும் டெல்டா மாவட்டங்களில் ஆடி மாதத்தில் குறுவை சாகுபடி தொடங்குகிறது. ஆடிப்பெருக்கு நன்னாளில் புதுமணத் தம்பதிகள் தாலிப்பிரித்து கோர்த்தல், சுபகாரியங்களை தொடங்குவது, புதிய பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பலவற்றை தொடங்குவார்கள்.


ஜோதிடம் சொல்வது என்ன?


சந்திர பகவான் ஒரு நீர் கிரகம் ஆவார். சந்திரனுக்கு உரிய கடக ராசியில் ஆடி மாதம் நடக்கிறது. ஆடி மாதம் 18ம் தினத்தில் சூரிய பகவான் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் இருந்து ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். பூச நட்சத்திரமானது சனி பகவானின் நட்சத்திரம் ஆகும். சனி பகவானின் பிரகஸ்பதி தேவகுரு. சூரிய பகவானின் பார்வையில் இருந்து தேவகுரு விடுபட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லும் நாள் ஆடி 18. சூரியனும் புதனும் நட்பு கிரகமாகும் இந்த நன்னாளில் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம் ஆகும்.


என்ன வாங்கலாம்? என்ன தொடங்கலாம்?


ஆடிப்பெருக்கில் புதிய பொருட்களை வாங்குவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. சிலர் ஆடிப்பெருக்கு தினத்தில் புடவை அல்லது நகை போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். போதிய நிதிவசதி இல்லாதவர்கள் இதற்கு பதிலாக கல் உப்பு அல்லது மஞ்சள் வாங்கலாம். ஏனென்றால், உப்பும் மஞ்சளும் மங்களகரமான பொருட்கள் ஆகும். இதன் காரணமாகவே பலசரக்கு பொருட்கள்  வாங்கும்போதும் கூட உப்பு, மஞ்சளிலே பொருட்கள் வாங்குவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.


உப்பு, மஞ்சளை வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். தாலி பிரித்துக் கோர்ப்பவர்கள் தாலியில் ஏதேனும் தங்கம் தேய்ந்திருந்தாலே, பழுதாகி இருந்தாலோ மாற்றிக் கொள்ளலாம். ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியம் செய்வதற்கு ஏற்றது அல்ல என்று கூறப்பட்டாலும், மற்ற சுபகாரியங்களுக்கு ஏற்ற மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில் புதிய தொழில் தொடங்குவது, புதிய கடை திறப்பது, புதிய வேலைக்கு முயற்சி செய்வது, சொந்த தொழில் தொடங்குவது போன்றவற்றை தொடங்கலாம்.