கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைபெற்ற திருத்தேர் திருவிழா நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாம்பிகை சமேத உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆனி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்தி சுவாமி வீதி உலா நடைபெற்றது.




கடந்த ஜூலை 9ஆம் தேதி அன்று அர்த்தநாரீஸ்வரருக்கும் முத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு சிவாலய வாத்தியங்கள் முழங்க 65 அடி உயர தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமியை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நமச்சிவாய நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பியவாறு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் திருவிழாவில் ரிஷிவந்தியம் மற்றும் இன்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் சிறப்புகள்:


இத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டார் எனவும், பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார் என நம்பப்படுகிறது



அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஒளி வடிவில் காட்சி தருகிறார் என நம்பப்படுகிறது. மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும். இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். இதுவே இத்தலத்தின் சிறப்பாகும். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம் என வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண