விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தண்ணீர் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 2800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்று சேரும் இடத்தில் வீடுர் நீர்த்தேக்க திட்டம் அமைக்கும் பணி 1958-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. வராகநதி மற்றும் தொண்டியாறு முறையே செஞ்சி வட்டம், பாக்கம் மலைத்தொடரிலிருந்தும், தொண்டூர் ஏரியிலிருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்ந்த பிறகு, அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரியின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீரோட்டம் பெறுகிறது.


 வீடூர் அணையின் மொத்த நீளம் 4,500 மீட்டர், நீர்மட்ட உயரம் 32 அடி மற்றும் முழு கொள்ளளவு 605 மில்லியன் கன அடிகள். வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்பொழுது வீடுர் அணையின் நீர்மட்டம் 31.675 அடி, 579.575 மில்லியன் கன அடி நீர் சேகரிப்பில் உள்ளது. இந்த ஆண்டு வீடுர் முழுகொள்ளளவை எட்டவில்லை பருவமழையின் பயனால் அணையில் 29.350 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. பாசன ஆயக்கட்டுதாரர்கள் கலந்தாய்வு கூட்டம் 24.01.2024 அன்று நடத்தப்பட்டது. நீர் இருப்புக்கு ஏற்றவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வீடுர் அணையிலிருந்து ஒருபோக விவசாய பாசனத்திற்காக 11.02.2024 முதல் 24.06.2024 வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப பாசனத்திற்கு தண்ணீர் திறந்திட உத்தரவிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் வீடுர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கான தண்ணீர் திறந்து வைத்து, மலர்தூரி வரவேற்கப்பட்டது.  வீடூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது தமிழ்நாட்டின் பகுதியான வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேனி, ஐவேலி, நெமிலி, ஏறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் புதுச்சேரி பகுதியில் 600 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று விவசாயிகள் இதன் மூலம் பயனடைவுள்ளனர்.