தஞ்சாவூர்: அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்.கே.எம். என்.பி.) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.


சண்டீகரில் இன்று நடைபெறவுள்ள அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் லாபகரமான ஆதார விலை குறித்த கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (எஸ்.கே.எம். என்.பி.) தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். சண்டிகருக்கு நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


மத்திய அரசு 2021 - 22ம் ஆண்டில் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் குறைந்தபட்ச லாபகரமான ஆதார விலை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்தியா முழுவதும் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் டில்லியில் நாளை 13ம் தேதி போராட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.


இதற்காக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி நோக்கி வந்து கொண்டுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை அனுப்பி மத்திய அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி 8 நாள் அவகாசம் கேட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்பட்டது. போராட்டக் குழு டில்லிக்குள் நுழைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்துவதற்குத் தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை மத்திய அரசின் சார்பில் அமைச்சரவை குழு அவசர, அவசரமாக கூடி இன்று பிப்.12ம் தேதி மதியம் 3 மணிக்கு சண்டீகரில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையேற்று அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒருங்கிணைப்பாளர் என்கிற அடிப்படையில் பங்கேற்கிறேன். கூட்டத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்வுகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கலந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க இளைஞர் அணி மாநிலச் செயலர் மகேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பத்மநாபன், கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலர் தெய்வமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.