நெல்லை, தூத்துக்குடி பாசனம்:


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற பிரதான அணைகள் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் இருபோக விவசாய நடைபெறுகிறது. அதன்படி ஜூன் மாதம் கார் சாகுபடியும், அக்டோபர் மாதம் பிசான சாகுபடியும் நடைபெறும். பாபநாசம் அணையின் 7 பாசன கால்வாய்கள் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இதேபோல் மணிமுத்தாறு அணையின் 4 பாசன கால்வாய்கள் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 22,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.




மணிமுத்தாறு ரீச்-களில் தண்ணீர் திறப்பு:


கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் முழுவதும் நீர் நிரம்பி இருந்தன. இதன் காரணமாக மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தாமதமாக ஜனவரி மாதம் தொடங்கி 83 நாட்களுக்கு விவசாய தேவைக்கு திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மணிமுத்தாறு அணையில் முதல் மற்றும் இரண்டாவது ரீச் மூலம் நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டத்தில்  பகுதிகளில் விவசாயம் நடைபெறும். இதே போல் மூன்றாவது மற்றும் நான்காவது ரீச் தண்ணீர் திறப்பின் போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற பகுதிகள் பயன்பெறும்.  அணையின் நீர் இருப்பை பொறுத்து ஒரு ஆண்டில் முதல் மற்றும் இரண்டாவது ரீச் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுவதன் மூலம் பயன்பெறும் பகுதிகளில் விவசாயம் நடைபெறும். அடுத்த ஆண்டு சுழற்சி முறையில் மூன்றாவது மற்றும் நான்காவது ரீச் திறந்து விடப்பட்டு அதன் மூலம் பயன்பெறக்கூடிய பகுதிகளில் விவசாயம் நடைபெறும். அதன்படி 2024 ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது ரீச் மூலம் பயன்பெறக்கூடிய விளை நிலங்களுக்கான ஆண்டு.




குளங்களில் குறைந்த தண்ணீர்:


இதன்மூலம் மணிமுத்தாறு அணையின் முதல் ரீச் மூலம் 81 குளங்களும், இரண்டாவது ரீச் மூலம் 89 குளங்களும் தண்ணீர் வரத்தால் பயன்பெறும். அதன்படி இரண்டாவது ரீச் மூலம் தண்ணீர் பெறக்கூடிய பகுதிகளில் ஒன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பொன்னாக்குடி. இந்த ஊரில் உள்ள பெரியகுளம் மூலம் 800 ஏக்கர் நிலங்களும், சுந்தரபாண்டிய குளம் மூலம் 43 ஏக்கர் நிலங்களும் விவசாயம் நடைபெறும். இந்த இரண்டு குளங்களுக்கும் அரசாணை படி 83 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


விவசாயிகள் கோரிக்கை:


இந்த  சூழலில் தற்போதைய நிலை குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் பொழுது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக பொன்னாக்குடி பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் தண்ணீர் தேவை குறைவு என தற்போது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது விவசாயம் தொடங்கி 50 நாட்கள் ஆன நிலையில் கோடை வெயிலின் காரணமாகவும், நாள்தோறும் விவசாய பயன்பாட்டின் காரணமாகவும் இரண்டு குளங்களிலும் தண்ணீர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.  இதனால் பயிர் வளருவதற்கு மீதமுள்ள நாட்களை காப்பாற்ற தண்ணீர் தேவை உள்ளது. காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தாலும் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே அரசின் அரசாணைப்படி தண்ணீரானது வரும். அதன் பிறகு நிறுத்தப்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் குளங்களில் தண்ணீர் இருப்பு மிகக் குறைவாகவே இருப்பதால் இன்னும் கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் முழுமையாக பயிர் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே இதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..