நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வதோடு ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் கரடி, காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. குறிப்பாக சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் வந்து  பயிர்களை  சேதப்படுத்தியதோடு,  அனைத்து பயிர்களையும்  அழித்து  நாசம் செய்து உள்ளது. 



குறிப்பாக மலைப்பகுதிகளில் இருந்து கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக இறங்கி வந்து மலை அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசம் செய்து வருவதாகவும், தற்போது நாசம் செய்துள்ள நெல் பயிர்களின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் எனவும் அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




 


இது குறித்து விவசாயிகள் கூறும் பொழுது, "எங்களுக்கு வாழ்வாதாரமே விவசாயம் தான், இந்த  விவசாயத் தொழிலை தான் நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். குறிப்பாக பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றோம். பார்த்து பார்த்து வளர்த்து வரும் நெற்பயிரை ஒரே இரவில் நாசம் செய்து விடுகிறது. ஒரு ஏக்கர் நெல் பயிரிட சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு வருகின்றோம். அதோடு தற்போது பயிரிட்ட நெல் பயிர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் யானைகள் கூட்டமாக வந்து எங்களது விளைநிலங்களை சீரழித்து வருகிறது. இதனை தமிழக அரசும், வனத்துறையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவசாய நிலங்களை சுற்றி மின்வேலி மற்றும் அகழிகள் அமைத்து தர வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் உயிர் வாழ முடியும். விவசாயத்தை காக்க முடியும். எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். மேலும், தற்போது மலையில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.