மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகளை சீரமைக்கும் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக ஸ்ரீவைகுண்டம் அணை உள்ளது. இந்த அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால் மூலம் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி தான். இந்த தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கும் உபயோகமாக உள்ளது. இந்த அணையில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. அதில் ஒன்றான திருவைகுண்டம் வட கால்வாய்மூலம் 9511 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12800 ஏக்கர் பயன்பெறுகிறது. அதில் இரண்டாவதான திருவைகுண்டம் தென் கால்வாய்மூலம் 10067 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12760 ஏக்கர் வரையிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.




கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது பாசன குளங்கள் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மழைக்காலத்திற்கு முன்பாக சேதமடைந்த குளங்களையும், மதகுகளையும் சீரமைக்கும் பணி நிர்வாகிகள் சார்பில் நடைபெற்றது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில் அணைக்கட்டில் உள்ள 2 மதகுகளில் ஓட்டை விழுந்தது. இதனால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்றது. மழைக்காலத்திற்கு முன்பாக மதகுகளில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் ஏரல் தாலுகாவில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவதிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணை மதகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைக்க வேண்டும் என தாமிரபரணி வடிநிலக்கோட்ட நீர் வளத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் பழுதடைந்த மதகுகளை நேரில் பார்வையிட்டு சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.




இந்நிலையில் பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. புதிய இரும்பு மதகுகளை கொண்டு சீரமைப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நீர்வளத்துறை உதவி பொறியாளர் அஜ்மீர் கான், பாசன உதவியாளர் கென்னடி உள்ளிட்டோர் மேற்பார்வையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதேபோன்று மழைக்காலத்திற்கு முன்பாக அணைகள் மற்றும் பாசன குளங்களில் சேதமடைந்திருக்கும் மதகுகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.