தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இந்த நிலங்கள் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பெய்யக்கூடிய பருவ மழையை மட்டுமே நம்பி புரட்டாசி ராபி பருவத்தில் பயிரிடுவது வழக்கம். இந்நிலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையாபுரம், கழுகுமலை, புதூர், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை கடந்த ஒரு மாத காலமாக சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்து தயார் செய்து வருகின்றனர். அதன் பிறகு 20 நாள் கழித்து பல் கலப்பை உழவு செய்யப்படும் ஒரு சில கிராமங்களில் மாடுகள் மூலம் உழவு செய்து வருகின்றனர்.
பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து மணி பிடிக்கவும் பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய மண் புழுக்கள் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தவும் மற்றும் ஆட்டுக்கிடை போட்டு வருகின்றனர். ஒருசில விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை சாதனங்களை சேமித்து வைத்து அதனை நிலங்களுக்கு எடுத்துச்சென்று கோடை உழவில் அதை தூவுவார்கள். கால்நடைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் ஏபிக தாராளமாக கிடைக்கவும் முறைகேடுகளை தவிர்க்க டிஏபி மற்றும் யூரியா உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முழுமையாக அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், ஆண்டுதோறும் கோடை உழவு செய்ய வேண்டிய வேளாண்மைத் துறையால் ஏக்கருக்கு ரூ.500 விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் வேளாண்மைத்துறை மூலம் கிராமங்கள்தோறும் விவசாய நிலங்களை மண் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறும் அவர், மண்ணின் தன்மைக்கேற்ப விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். சிறுதானியம் பயிர் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும் விவசாயிகளை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராபி பருவத்திற்கு இன்னும் 3 மாத காலமே உள்ளது. இந்திய உரக்குழு தலைவராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் இருந்து வருவதால் சொந்த மாவட்ட விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர முறைகேடுகளை தவிர்க்க டி ஏ பி , மற்றும் யூரியா உரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முழுமையாக அரசு வழங்க வேண்டும் என்கிறார்.
இதுகுறித்து அச்சங்குளம் விவசாயி கூறும்போது, கோவில்பட்டி கோட்டத்தில் கோடை உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சமயத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலும் இயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும். இதற்கு கிராமங்களில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். மழை வளம் பெற வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதுபோல் இயற்கை உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வீட்டிற்கு ஒரு கால்நடை வளர்க்க விவசாயிகள் முன்வர வேண்டும். இதன் மூலம் பயிர்கள் ஊட்டச்சத்து நிறைந்த செழித்து வளரும் என்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்