திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை இன்றைய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.

 

தமிழக அரசு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடைமடை மாவட்டங்கள் என்பதால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இங்கு உள்ள விவசாயிகளும் மாணவர்களும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை ஆகையால் இன்றைய பட்ஜெட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.



மேலும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் வேறு எந்த தொழிற்சாலையும் இங்கு இல்லாததால் விவசாயம் இல்லாத காலகட்டங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இங்கு உள்ள இளைஞர்களும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் வேளாண் சார்ந்த தொழிற்சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் இன்று வேளாண் பட்ஜெட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வங்கி வேலை நாள் பணியினை கூடுதல் நாட்களாக அறிவிக்க வேண்டும்.



அதேபோன்று விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை சேமித்து வைப்பதற்கு வேளாண் கிடங்குகள் அமைப்பதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் கிடங்குகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். ஏற்கனவே வேளாண் கிடங்குகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை தற்போது வெளியாகும் பட்ஜெட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கு வேளாண் கிடங்குகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து கிடங்குகளை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை அகற்றிவிட்டு புதிய பாதுகாப்புடன் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசிற்கு முன் வைத்துள்ளனர்.