புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி பயிர் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; பயிர் விளைச்சல் போட்டி தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் பயிர் சாகுபடியில் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், செம்மை நெல் சாகுபடி மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி ஒவ்வொரு  ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி 2022-23-ம் ஆண்டில் செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதல் பரிசு ரூபாய் 25 ஆயிரம், 2-ம் பரிசு ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. கம்பு, உளுந்து மற்றும் துவரை பயிர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நெல், நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கம்பு பயிருக்கு முதற்பரிசாக ரூபாய் 10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ள திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இப்போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்கலாம்.


 




 


பயிர்களை புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பக் கட்டணமாக செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 150-ம், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 100-ம் மற்றும் மாவட்ட அளவிலாக பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 50-ம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் கார்டு நகலினை அளித்து பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக மகசூல் உற்பத்தி செய்து விவசாயிகள் பரிசு பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.