தஞ்சாவூர், கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில், ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, பூதலுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
விவசாயி ரவிச்சந்தர்: அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சி.சி.டி.வி.,கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசாரும், உள்ளாட்சி துறையும் இணைந்து கொள்முதலில் முறைகேட்டை கண்காணிக்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா,தாளடி நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையாக திருவாரூர் மாவட்டத்துக்கு 94.56 கோடி, புதுக்கோட்டைக்கு 23.01 கோடி, பெரம்பலுாருக்கு 20.29 கோடி,அரியலுாருக்கு 17.97 கோடி,நாகைக்கு 13.52 கோடி என வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெறும் 36 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, காப்பீடு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை வேண்டும். வருங்காலத்தில் சோதனை அறுவடையின் போது விவசாயிகளை அழைத்து வேளாண் காப்பீடு நிறுவனம் இணைந்து அந்த பணிகளை செய்ய வேண்டும்.
சம்பந்தம்: திருவையாறு வட்டம் மேலபுனவாசல், வைத்தியநாதன்பேட்டை, ஆற்காடு ஆகிய கிராமங்களில் அனுமதியின்றி செங்கல்சூளை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாசன வாய்க்கால்கள், அதன் கரைகளில் 30 அடி அழத்திற்கு மண் எடுப்பதால் வாய்க்கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்.
அய்யாரப்பன்: அணைக்குடி முதல் விளாங்குளம் வரை கொள்ளிடம் கரை சாலை மிகவும் மோசமாக உள்ளதால், குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி செல்வதில் சிரமமாக உள்ளது. அப்பகுதியில் 4 கி.மீ.,துாரத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மேம்படுத்த வேண்டும்.
சுகுமாறன்: ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதியில், சம்பா அறுவடை பணிகள் ஒரு சில இடங்களில் துவங்கப்பட்டு விட்டன. எனவே, தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
கோவிந்தராஜன்: அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், வெளியூர் நெல் வியாபாரிகள் நெல் விற்பனையை தடுக்க புதியதாக திருச்சி மண்டலத்தில் எஸ்.பி., நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரும் இதை அவ்வபோது கூறி வருகிறார். ஆனால், வெளியூர் நெல் வியாபாரிகள் நெல்லை டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு முழுமையாக கொள்முதல் பணியாளர்கள், லோடுமேன்கள் ஆதரவு தருகிறார்கள். எனவே, இதை தடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.